மது விலக்கு தேவை தான் என்றாலும் மது விற்பனையால் கிடைக்கும் வருமானத்தினை விட குடிப்பவர்களின் ஒட்டு போய் விடும் என்பதால் ஆள்பவர்கள் மதுபான விற்பனை மீது கை வைப்பதில்லை. உம்மன் சான்டி அவர்கள் சமூக அக்கறையுடன் 418 மதுபான விடுதிகளின் உரிமத்தினை இரத்து செய்துள்ளார். பூரண மதுவிலக்கு இல்லாவிட்டாலும் இந்த மாதிரி படிப்படியாகவாவது தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்கலாம். ஆனால் தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கின்ற மாதிரி தெரியவில்லை. நெடுஞ்சாலை அருகிலுள்ள மதுக்கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட போது அந்த வாய்ப்பினை தமிழக அரசு பயன்படுத்திக் கொண்டிருக்கவேண்டும். ஆனால் தமிழக அரசு பம்மாத்து வேலை தான் செய்தது. சில இடங்களில் நெடுஞ்சாலைக் கடைகளின் முன்வாசல் அடைக்கப்பட்டு பின்வாசல் வழியாக வியாபாரம் நடந்தது. இதுதான் நீதிமன்ற உத்திரவிற்கு கட்டுப்படுகின்ற அழகா? இதைவிட கோமாளித்தனம் இலக்கினை எட்ட முடியாத டாஸ்மாக் பணியாளர்கள் தற்காலிக வேலிநீக்கம் செய்யப்பட்ட கொடுமை. சாராயக் கடை தான் அதற்காக அங்கு வேலை செய்வோர்க்கு பணிப்பாதுகாப்பு கொடுக்கக் கூடாதா? சாராய விற்பனை குறைந்தால் நல்ல விஷயம் தானே? புதிய இடங்களில் மதுக்கடை அமைத்தால் மக்கள் உடனே போராடுகின்றார்கள். ஆனால் தமிழக அரசு செவி சாய்ப்பதில்லை. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல் செய்வதற்கு தமிழக அரசின் அரசியல் தலைமைக்கு விருப்பம் இல்லை என்பது தெளிவு. மேலும் தமிழக அரசுக்கு மதுபானம் அனுப்பும் நிறுவனங்களின் உரிமையாளர் பற்றிய விபரங்கள் மக்கள் அரங்கில் வைக்கப்படவேண்டும். தமிழக அரசின் தீவிர மதுவிற்பனைக் கொள்கைக்கும் மதுபான உற்பத்தியாளர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா என்று ஆராயப்பட வேண்டும் ? நான் சொல்வது என்னவென்றால் பூரண மதுவிலக்கு கொண்டு வராவிட்டாலும் மதுவிற்பனை மீது கட்டுப்பாடு விதிக்கப்படவேண்டும். வார இறுதி நாட்களில் சனி ஞாயிறுகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படவேண்டும். இந்த இரண்டு நாட்களிலும் தான் தொழிலாளர்கள் அதிகப் பணத்தினை இழக்கின்றனர். கல்லூரி பள்ளி மாணவர்கள் குடித்து பழகுகின்றனர். ஞாயிற்றுக் கிழமை மற்ற நாட்களை விட விபத்து அதிகமாக நடப்பதாக எனக்கு தோன்றுகின்றது. இந்த விபத்துக்களுக்கும் மதுவே காரணம். மேலும். மற்ற நாட்களிலும் மதுக்கடைகள் திறக்கும் நேரம் குறைக்கப்படவேண்டும். புதிய மதுபானக் கடைகள் திறக்கப்படக் கூடாது. இவற்றினைச் செய்தால் தமிழக அரசிற்கு ஏதாவது சிறிதளவாவது சமூக அக்கறை இருக்கின்றது என்று நாம் நினைக்கலாம். கடைசியாக மதுவிலக்கிற்காக போராடும் காந்தியவாதி சசிபெருமாள் சட்டக் கல்லூரி மாணவி நந்தினி ஆகியோருக்கு நன்றிகள்.
No comments:
Post a Comment