Wednesday, April 30, 2014

தமிழக அரசியலிலே தற்போது ஒரு வெற்றிடம் இருக்கின்றது. சாதரண மனிதர்கள் ஒரு நல்ல மாற்றத்தை தரும் கட்சியினை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழகத்திலே காங்கிரஸ் என்றைக்குமே ஒரு  மாற்றாக கருதப்பட்டு வந்திருக்கின்றது. அதனால் தான் என்னவோ கடந்த 4 அல்லது 5 வருடங்களாக தமிழக காங்கிரஸ் மீது ஒரு திட்டமிடப்பட்ட வெறுப்பு பிரச்சாரம் தமிழ்நாட்டிலே நடத்தப்பட்டு வந்தது. என்ன காரணத்தினாலோ தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் அந்த வெறுப்புப் பிரச்சாரத்திற்கு சரியான பதிலடி தரவில்லை.  இந்த லோக்சபா தேர்தலில் அந்த வெறுப்புப் பிரச்சாரம் உச்ச கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டது.  இந்த வெறுப்புப் பிரச்சாரத்தின் பிண்ணனி யார்? காங்கிரஸ் பலவீனமடைவதால் தமிழகத்தில் உடனடியாக பலனடைபவர்கள் திமுக மற்றும் அதிமுக கட்சியினர் தான். ஏனென்றால் தமிழகத்தில் இந்த இரண்டு இயக்கங்களுக்கும் மாற்றாக காங்கிரஸ் மட்டுமே இருக்க முடியும் என்பது தெளிவான உண்மை. விஜயகாந்த் அல்லது கோபால்சாமி தமிழ் நாட்டில் அரசியலில் வெற்றுக் கூச்சல் பேர்வழிகள் தான். இவர்களை மேலே விடாமல் தட்டிவைக்க அதிமுக திமுகவினால் முடியும் ஆனால் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து விட்டால் இரண்டு கழகங்களுக்கும் சமாதி கட்டிவிடுவார்கள் என்பது இரண்டு கழகங்களுக்கும் தெரியும். இரண்டு கழகங்களுக்கும் எதிராக விஜயகாந்த் கோபால்சாமி இராமதாஸ் ஆகியோருடன் பாரதிய ஜனதா ஏற்படுத்தியிருக்கும் அரசியல் கூட்டணி ஒரு மழை நேரத்துக் காளான் தான்.  பாரதிய ஜனதா தேர்தலுக்கு பிந்தி  திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டு சேரும் என்பது விஜயகாந்திற்கும் தெரியும்  கோபால்சாமிக்கும் தெரியும் இராமதாஸிற்கும் தெரியும். பெரும்பான்மை மக்கள் மத்தியில் இந்த தலைவர்கள் புத்திசாலிகளாகவோ, திறமை படைத்தவர்களாகவோ காட்சியளிக்கவில்லை. இவர்கள் தமிழ்நாட்டை ஆள்வதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படமாட்டார்கள் என்பதை மட்டும் நாம் தமிழக அரசியலில் உறுதியாகக் கூறலாம். இந்தச்சூழலில் தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப காங்கிரசினால் மட்டுமே முடியும். இதற்கு இரண்டு தளங்களில் போராட வேண்டும். காங்கிரஸ் கட்சி அமைப்பினை வலுப்படுத்த வேண்டும். கட்சி அமைப்பினை வலுப்படுத்த அனைத்து கோஷ்டிகளும் ஒன்றாகச் செயல் படவேண்டும். காங்கிரசின் கோஷ்டிகள் தான் காங்கிரசின் பலம் என்று நான் கருதுகின்றேன். அமைப்புரீதியாக காங்கிரஸ் கட்சியை தமிழ் நாட்டில் பலப்படுத்த வேண்டும்.  சட்டசபைத் தேர்தல் லோக்சபா தேர்தல் மட்டும் தான் கட்சிப் பணிகள் அல்ல. உள்ளாட்சித் தேர்தல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் பேருராட்சியிலும் நகராட்சியிலும் மாநகராட்சியிலும் காங்கிரசிற்கு பிரதிநிதிகள் வேண்டும். இவர்களுடன்  தமிழகத் தலைமை தொடர்பில் இருக்க வேண்டும். இரண்டாவதாக தமிழகமெங்கும் மக்கள் பிரச்சனைகளுக்காக போராட வேண்டும். தமிழகத்தின் இப்போதைய மிகப் பெரிய பிரச்சனை மின்வெட்டு தான். கடந்த 5 வருடங்களில் ஆட்சியில் இருந்த திமுகவும் இப்போது ஆட்சியில் இருக்கும் அதிமுகவும்  புதிய மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவுவதற்கு  சிறு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை என்பதும் மக்கள் இதன் காரணமாக கோபத்தில் இருக்கின்றார்கள் என்பதும் உண்மை.  இவ்வளவு வருடம் பெரிதாக இல்லாத குடிநீர்ப் பிரச்சனை இந்த வருடம் வறட்சி காரணமாக தலை விரித்து ஆடுகின்றது. இன்னும் நிறைய வீடுகளில் கழிவறை கிடையாது.  கிராமப்புற சாலைகள் ஒரளவிற்கு போடப்பட்டாலும் நல்ல சாலைகள் கிடையாது. அரசு அலுவலகங்களில் மக்களுக்கு சுத்தமாக மரியாதை கிடையாது.பணம் கொடுத்தாலும் வேலைகள் நடப்பதில்லை.மதுபானம்  தாராளமாக புழங்குகின்றது. மதுபானக் கடைகளுக்கு கட்டுப்பாடு தேவை. காவல் துறை ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. சட்ட ஒழுங்கு இலட்சணமும்  காவல் துறை மக்களுக்கு தரும் மரியாதையும்  ஊர் அறிந்த சங்கதிதான்.  பாராளுமன்றத் தேர்தல் 2014 மாநில அரசின் பிரச்சனைகள் அதிகம் பேசப்படவில்லை. ஆனால் 2016 தேர்தல் அப்படி இருக்கப் போவதில்லை. 2016 மாநிலத் தேர்தலில் காங்கிரசிற்கு ஒரு திட்டமிட்ட அணுகுமுறை தேவை. இத்தகைய மக்கள் பிரச்சனைகளுக்கு காங்கிரஸ் இப்போதிருந்தே போராட வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனையில்  விடுதலைப்புலிகள் பற்றிய பல உண்மைகள் மக்களைப் போய்ச் சேர வில்லை. போர்க் களத்திலிருந்து அப்பாவி மக்கள் வெளியேறுவதை தடுத்து நிறுத்தியவர்கள் விடுதலைப்புலிகள். விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தில் வாழும் ஒரு சிறு குழுவின் பிரதிநிதிகள் மட்டுமே. கிழக்கு மாகண தமிழர்கள் இந்தியத் தமிழர்கள் முஸ்லீம் தமிழர்கள் ஆகியோரினை விடுதலைப்புலிகள் நிராகரித்து வந்திருக்கின்றார்கள்.  கொழும்பில் தமிழர்கள் நிறையப் பேர் வாழ்கின்றார்கள். தமிழக போலி இனவாதிகள் சொல்கின்ற மாதிரி இலங்கைப் பிரச்சனையில் காங்கிரஸ் துரோகம் செய்து விடவில்லை. இந்தப் போலி இனவாதிகளில் பலர் அதிமுக அல்லது திமுகவிற்காக குரைத்துக் கொண்டிருக்கின்றனர்.  யார் வீட்டு நாய் எந்த எலும்புத்துண்டிற்காக குரைக்கின்றது என்று கண்டுபிடிக்க முடியாது. காங்கிரசிற்கு எதிரான வெறுப்புப்பிரச்சாரத்தின் அஸ்திவாரம் இவர்கள் தான். இந்த நாய்களை காங்கிரஸ் உதாசீனம் செய்ய முடியாது.இவர்களுக்கும் பதிலடி கொடுக்க வேண்டும். தமிழ் பத்திரிக்கைகளில் காங்கிரஸ்காரர்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.காமராசர் மாதிரி நிர்வாகம் செய்வோம் என்று மேடைகளில் முழங்குவது போதுமானதல்ல. உங்கள் கட்சி நிர்வாகம் என்ன இலட்சணத்தில் இருக்கின்றது என்று மக்கள் கேட்பார்கள். மாவட்ட கமிட்டி கூட்டங்களும் மாநிலக் கமிட்டி கூட்டங்களும் சரியான முறையில் கூட்டப்படுவதில்லை. தேர்தலுக்கு விருப்ப மனு வாங்கினால் ஒரு நேர்காணல் இல்லை. என்ன அவசரம் இருந்தாலும் 1200 பேருக்குமேல் விருப்ப மனு கொடுத்திருக்கின்றார்கள். காங்கிரசில் தேர்தலில் நிற்பதற்கு ஆள் இருக்கின்றதா என்று கேட்டவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக  விருப்பமனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல் நடத்தியிருக்க வேண்டாமா? விருப்ப மனு கொடுத்தவர்கள் அனைவருக்கும் வாய்ப்பளிக்க முடியாது ஆனால் நேர்காணலில் என்ன பிரச்சனை?  எல்லாவற்றிற்கும் தில்லியை குறை சொல்வதில் பலன் இல்லை. அதிமுக திமுகவிற்கு பின்புலமாக ஊடகங்களில் திரையுலகில் பல குழுக்கள் இயங்குகின்றன. ஆனால் காங்கிரஸ் என்னதான் செய்து கொண்டிருக்கின்றது . விஜய் டில்லியில் ராகுலை சந்தித்து விட்டு வருகின்றார். அப்போது காங்கிரஸ் ஆதரவுடன் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த திமுகவினால் காங்கிரசில் சேர்வதற்கு வந்த நடிகர் விஜயை  மிரட்ட முடிகின்றது. இப்படி இருந்தால் எப்படி காங்கிரஸ் தமிழ்நாட்டில் முக்கிய சக்தி ஆக முடியும். திமுக அதிமுக சதிக்கு காங்கிரஸ் ஈடு கொடுக்க வேண்டும். மின்வெட்டு பிரச்சனையில் பாருங்கள் . ஜெயலலிதா மின்வெட்டிற்கு மத்திய அரசின் சதிதான் காரணம் என்று சொன்னார். மக்கள் அதை நம்பினார்கள். பின்னர் திமுக மின் உற்பத்தியை அதிகரிக்க வில்லை என்றார். பின்னர் தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன் நிறைவு அடைந்து விட்டது என்றார். இப்போது தேர்தல் சமயத்தில் வேலையாட்கள் சதி என்கின்றார் தொடர்ந்து ஜெயலலிதா பேசிய பொய்களைப் பார்த்து தான்  மக்கள் மின்வெட்டுக்கு மத்திய அரசு காரணம் இல்லை என்பதை உணர்ந்திருக்கின்றார்கள். இந்த சங்கதிகளை காங்கிரஸ் மக்கள் மன்றத்தில் கொண்டு செல்லவில்லை.  மக்களூக்கு  நல்லது செய்ய வேண்டும் என காங்கிரஸ் நினைத்தால் சதிகள் பல செய்தாவது  மக்கள் விரோத அதிமுக திமுக கட்சிகளை அரசியல் அரங்கில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். அது தான் காங்கிரஸ் மக்களுக்குச் செய்கின்ற பெரிய நன்மையாக இருக்கும்.

No comments:

Post a Comment