தமிழகத்தில் புயலிற்கு பிந்தைய அமைதியா அல்லது புயலிற்கு முந்தைய அமைதியா என்று தெரியவில்லை.தேர்தலுக்கு பின் தமிழகம் அமைதியாக இருக்கின்றது. தேர்தலுக்கு முந்தைய நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் வானளாவிய அதிகாரம் கொண்ட அமைப்பு போலும். சட்ட விரோதமான இந்த அறிவிப்பிற்கு எதிராக எந்த கட்சியும் ஏனோ வாயை திறக்கவில்லை. எத்தனை பரபரப்பான பொதுத்தேர்தல் இது 2014 ம் வருடத்திய பாரளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் தான் எத்தனை அணிகள். ஆனால் நான் தமிழக அணிகளை இரண்டாக பிரிப்பேன் !. காங்கிரஸ் கட்சி ஒரு அணி காங்கிரஸினை எதிர்ப்போர் மற்றா அணிகளாக. ஒரு பிரபல வார இதழில் ஒரு வாசகர் எழதிய கருத்து எனக்கு நினைவுக்கு வருகின்றது. தமிழக அரசியல் களத்தினை ஒரு சதுரங்கப்பலகைக்கு ஒப்பிடுகின்றார் அந்த வாசகர் அதிமுக ராணி திமுக இராஜா பாஜக மதிமுக தேமுதிக எல்லாகட்சிகளையும் சதுரங்க காய்களுக்கும் ஒப்பிடுகின்றார். காங்கிரசினை எதற்கு ஒப்பிடுகின்றார். இந்தக் காய்கள் நகரும் சதுரங்கப் பலகையே காங்கிரஸ் தானே ! என்று அந்த வாசகர் கூறுகின்றார். தமிழ் நாட்டின் இந்த லோக்சபாதேர்தல் காங்கிரசினை மையமாக வைத்துத் தான் நடந்தது. ஜெயலலிதா காங்கிரசினை திட்டினார். ஸ்டாலின் காங்கிரஸ் கூட்டணியை நிராகரித்தார். விஜயகாந்த் டெல்லி போய் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினார். பின்னர் வந்து என்ன காரணத்தினாலோ பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்தார். அந்தக் கூட்டணியில் வைகோ போன்ற பரம காங்கிரஸ் வைரிகளும் வந்து சேர்ந்தனர். எல்லாரும் சேர்ந்து கொண்டு விலைவாசி உயர்வு என்றார்கள். வேலையில்லா திண்டாட்டம் என்றார்கள். ஜெயலலிதா ஊழலைப் பற்றி ஒரிரு இடங்களில் பேசினார். ஜெயலலிதா ஊழல் பற்றி பேசினால் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திலே தமிழக அரசு வழக்குரைஞர் எடுத்து வைத்த ஜெயலலிதாவின் மலைக்க வைக்கும் சொத்துக் கணக்கு பற்றி வீதிக்கு வீதி பேசுவார்கள் என்பதால் என்னவோ அவர் அடக்கி வாசித்தார். திமுக வினைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் ஊழலில் விஞ்ஞானத்தினை கண்டறிந்தவர்கள். அரசு பணம் தேனடை மாதிரி அவர்களுக்கு. புறங்கையை நக்கி கொண்டிருந்தவர்கள் கையில் கடல் மாதிரி 2 ஜீ கிடைத்தது. ஊழல் பற்றி அவர்கள் என்றைக்குமே மவுனம் சாதிப்பார்கள். ஆகவே குஷ்பூவை வைத்து திமுக பிரச்சாரத்தினை முடித்து கொண்டது. இலங்கைத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் பெயர் கெட்டிருக்கின்றது என்று நினைத்து ஸ்டாலின் கூட்டணிக்கு மறுத்தார். தேர்தலுக்கு தேர்தல் இலங்கைத் தமிழர் படுகொலையை வீடியோ பிரச்சாரம் செய்து கொண்டிருந்த வைகோ இந்தத் தேர்தலில் வாய் மூடி மவுனியாக இருந்தார். பாரதிய ஜனதா கொண்டு வந்த பொடா சட்டம் வைகோவை ஒருவருடம் சிறையில் வைத்தது. இந்த தேர்தல் இரண்டு மாதத்திற்கு வாய்பூட்டு போட்டிருக்கின்றது. காந்திய மக்கள் இயக்கம் என்ற பெயரில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு அடித்தளம் இட்ட பேச்சு வியாபாரி தமிழருவி மணியன் தனக்கு லோக்சபா சீட்டு கிடைக்காத சோகத்தில் மனஉளைச்சல் என்றெல்லாம் கோயமுத்தூரில் பேசினார். 21 ம் நூற்றாண்டின் அரிச்சந்திரன் இவர். நேரு குடும்பம் தான் இந்தியாவினை பரம்பரையாக ஆள வேண்டுமா? என்று புதிய கூட்டணிக்கு புறப்பட்டவர் இவருக்கு ஒரு சீட் வழங்க பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் இல்லை.அப்புறம் சினிமா நடிகர்களை கடுமையாக எதிர்த்த இராமதாசும் இராமதாசின் கொள்கைக்கு எதிராக குடிப்பதையும் சினிமாவில் நடிப்பதையும் தொழிலாக கொண்ட விஜயகாந்தும் இந்த வினோத கூட்டணியில் கையை பிசைந்து கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அப்புறம் சோ அய்யர் இவர் ஜெயலலிதாவை ஆதரிப்பதா அல்லது மோடியை ஆதரிப்பதா என்று குழம்பிப் போனார். இவர் எல்லாம் குழம்பிப் போனார் என்றால் 2014 தேர்தல் எத்தனை குழப்பமான தேர்தலாக இருக்கும் பாருங்கள். இவர் ரொம்ப நாள் சிந்தனை செய்து ஒரு கூட்டணியை உருவாக்கினார். பாரதிய ஜனதா நிற்காத இடங்களில் அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என்றார் கடைசியில் ஆண்டவா. இரஜினி விஜய் வாய் திறக்காவிட்டால் தமிழகத் தேர்தல் முற்றுப் பெறாது. ஆகவே மோடி வந்து ரஜினியை சந்தித்து பேசினார். ரஜினி 2004 ல் வாஜ்பாயை தமிழ்நாட்டில் கரையேற்ற முயன்றார். கரையேற்றினாரா என்பது தமிழகம் அறிந்தது தான். என்.டி.ஏ 39ல் 0 தொகுதி பெற்றது. அப்புறம் விஜய். படங்களில் எதிரிகளை பின்னி எடுக்கலாம். நிஜவாழ்வில் சரணாகதி தத்துவமே சிறந்தது என்று கோட நாட்டிலே குடும்பத்தோடு கும்பிடு போட்டு நின்றவர் என்ன தைரியத்தில் மோடியை சந்தித்தார் என்று தெரியவில்லை. அழகிரி ஒரு பக்கம். பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்து செய்த கொலைகள் தா.கிருஷ்ணன் கொலைவழக்குகள் எல்லாம் தேர்தல் நெருங்க நெருங்க எல்லாம் மறந்து விடுகின்றது. இனி ஸ்டாலின் வந்து தான் ஞாபகப்படுத்த வேண்டும். எல்லாப் பரபரப்பினையும் எதிர்பார்ப்பினையும் ஆளுங்கட்சி ஒரே அஸ்திரத்தால் முடிவு கட்டிவிட்டது. தேர்தலுக்கு முந்திய நாட்கள் பணப் பெட்டிகள் திறந்து விடப்பட்டன. கடைக்கோடி தமிழனும் விலையில்லா பணத்தினை பெற்றுக் கொண்டு ஜென்ம சாபல்யம் அடைந்தான். இனிமேலும் நீங்கள் தேர்தலில் எதிர்பாராத முடிவு எதிர் பார்த்துக் காத்திருக்கின்றீர்களா? மேட்ச் பிக்சிங் தான் இந்தக் காலத்தில் உதவும்.
No comments:
Post a Comment