Saturday, November 28, 2015

அரசியல் சாசனம் ஒரு அறிமுகம் 

                     இன்றைக்கு நிறையப் பேர் பயன்படுத்தும் ஒரு வாசகம் இது. அரசின் நடவடிக்கை  அரசியல் சாசனத்திற்கு முரணானது என்ற வாக்கியம். அது என்ன அரசியல் சாசனம்?. மன்னர்கள் ஆட்சி நிறைவுக்கு வந்து இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியா நிறுவனத்தின் ஆட்சி முடிவுக்கு வந்து,  இங்கிலாந்து மகாராணி இந்தியாவை ஆளும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு சில காலம் கழித்து இந்தியாவை இந்தியர்களே ஆண்டுகொள்ள வேண்டும் என்ற விருப்பம் இந்தியர்களுக்கு உருவானது. மேலை நாடுகளில் கல்வி பயின்ற இந்தியர்கள் மேலை நாடுகளில் பரவி இருந்த ஜனநாயக முறைகளால் கவரப்பட்டார்கள். இந்தியாவிலும் மக்களே தங்களை ஆண்டு கொள்ளும் சுயாட்சி வேண்டும் என்ற சிந்தனை அவர்கள் மனதிலே தோன்றியது. அதற்கு முன்பாக இந்தியர்களுக்கு வெள்ளையர் அரசாங்கத்தில் அதிக உரிமைகளைப் பெற காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டிருந்தது. 
                 காங்கிரஸ் கட்சியின் நோக்கங்கள் படிப்படியாக  அதிகாரத்தில் பங்கு என்று ஆரம்பித்து முழுவிடுதலைப் போராட்டமாக வளர்ச்சியடைந்தது. இந்த  விடுதலைப் போராட்டத்தின் வழிகாட்டியாக காந்தி இருந்தார். அஹிம்சா வழியில் ஒரு ஜனநாயக நாடு உருவாவதற்கான கனவு அவரிடம் இருந்தது. அந்தக் கனவின் அடிப்படையில் நமக்கு எப்படிப்பட்ட அரசாங்கம் வேண்டும் என்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் தீர்மானிக்கக் கூடிய இடம் தான் அரசியல் சாசன சபை. மன்னர் ஆட்சியில் மன்னரே எல்லா அதிகாரங்களையும் செலுத்துகின்றார். எழுதப்பட்ட சட்டங்கள் எதுவும் அவருக்கு தேவையில்லை. அவரே நிர்வாகி. வரி வசூல் செய்து ஆட்சி பரிபாலனம் செய்வார். அவரே நீதிபதி. தேர்தல்கள் எதுவும் தேவையில்லை. ஆனால் மக்களாட்சி வேண்டும் என்று முடிவு செய்த ஒரு நாடு ஆட்சி முறை எப்படி இருக்கவேண்டும். அதிகாரங்கள் யாரிடத்தில் இருக்க வேண்டும், மக்களுக்கு என்ன உரிமைகள் என்ற தீர்மானித்து பிரகடனம் செய்தது தான் அரசியல் சாசனம்.
               இந்திய அரசியலமைப்பு ஒரு சட்டம் அல்ல. அது ஒரு பிரகடனம்.  அது என்ன ஆட்சி முறை இருக்க வேண்டும் , மக்களின் உரிமைகள் என்ன, என்பதைப் பற்றிய ஒரு பிரகடனம். இந்தியர்களாகிய நாம் இந்தியாவை ஒரு  ஆளுமையுள்ள, சமதர்ம,  மதசார்பற்ற, மக்களாட்சி குடியரசு முறை ஜனநாயக நாடாக உருவாக்க உறுதி பூண்டு இந்த அரசியல் சாசனத்தினை உருவாக்கி நமக்கு நாமே வழங்கிக் கொள்கின்றோம் என்று அரசியல் சாசனத்தின் முகப்புரை கூறுகின்றது.
              இந்திய அரசியல் சாசனத்தில் என்ன தான் இருக்கின்றது. அரசியல் சாசனத்தின் பெரும்பிரிவுகள் இவை தான். 
                         I.இந்தியாவின் பகுதிகள்
                         II.யார் இந்தியக் குடிமகன்
                         III.மக்களின் அடிப்படை உரிமைகள்
                         IV. அரசுகளை வழிநடத்த வேண்டிய கொள்கைகள்
                         V. மத்திய அரசு 
                         VI. மாநில அரசுகள்
                         VII.பார்ட் பி மாநிலங்கள்
                         VIII.மத்திய ஆட்சிப் பகுதிகள் 
                         IX.உள்ளாட்சி
                          X.பழங்குடியின மலைவாழ் மக்கள் பகுதிகள் 
                          XI.மத்திய மாநில அரசுகளுக்கிடையே உறவு, அதிகாரப் பங்கீடு 
                         XII.மத்திய மாநில அரசுகளின் சொத்துக்கள், ஒப்பந்தங்கள், வழக்குகள்
                         XIII.இந்தியாவின் உள்நாட்டு வணிகம், வியாபாரம்
                         XIV.மத்திய மாநில அரசுகளின் அரசுப் பணிகள்
                         XV.மத்திய அரசு மாநில அரசின் தேர்தல்கள்
                         XVI.தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகளுக்கான சில சிறப்பு உரிமைகள்
                         XVII.மத்திய மாநில அரசுகளின் அலுவல் மொழி
                         XVIII.நெருக்கடி காலத்திற்கான வழிவகைகள் 
                         XIX.இதர விவகாரங்கள்
                         XX.அரசியல் சாசனத் திருத்தம் 
                         XXI.தற்காலிக மற்றும் சிறப்பு , மாறும் நிலைக்கான வழிவகைகள்,
                         XXII. குறுந்தலைப்பு, தொடக்கம் மற்றும் இந்தியில் அதிகாரப் பூர்வ மொழிபெயர்ப்பு . 
                   என்று 22 அத்தியாயங்களுடனும் கூடுதலாக 12 அட்டவணைகளுடனும் இந்திய அரசியல் சாசனம் எழுதப்பட்டுள்ளது.  22 அத்யாயங்களும் 395 பிரிவுகளும் கொண்டிருக்கின்றது இந்திய அரசியல் சாசனம். ஏதாவது பிரிவுகளில் மிக அதிகத் தகவல்கள் இருந்தால் தனியாக பிரிக்கப்பட்டு அட்டவணையில் விரிவாக சொல்லப்படுகின்றன. அரசியல் சாசனத்தின் ஒவ்வொரு அத்யாயமும் என்ன சொல்கின்றது என்பது பற்றிச் மிகச் சுருக்கமான விபரங்கள் கீழே. 
  I.இந்தியாவின் பகுதிகள் 
                   அரசியல் சாசனத்தின் முகப்புரைக்கு பின்னர் முதலில் இந்தியாவின் எல்லைகள் பற்றிப் பேசப்படுகின்றது. 1முதல் 4 வரையிலான பிரிவுகள் இந்தியாவின் பகுதிகள் எவை என்பது பற்றியும், மாநிலங்களை உருவாக்கவும், மறுவரையறை செய்யவும் பாராளுமன்றத்தின் அதிகாரம் பற்றியும் பேசுகின்றது. மாநிலங்கள் பற்றிய விபரம் அட்டவனை 1 ஆக இணைக்கப்பட்டுள்ளது. 
 II.இந்தியாவின் குடியுரிமை
                  5 முதல் 11 வரையிலான பிரிவுகள் இந்தியாவின் குடியுரிமை யாருக்கு என்பது பற்றிப் பேசுகின்றது. 
III.மக்களின் அடிப்படை உரிமைகள் 
                  13 முதல் 35 வரையிலான பிரிவுகள் தான் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றிப் பேசுகின்றன. இவை தான் அரசியல் அரங்கிலும் மக்கள்: மன்றத்திலும் அதிகம் விவாதிக்கப்படுகின்றன. அரசியல் சாசனம் சம உரிமை, கருத்துச் சுதந்திரம், உயிர்வாழ்விற்கான உரிமை, விரும்பும் மதத்தினை பின்பற்றும் உரிமை, சிறுபான்மை மதம் மொழி கல்வி கற்பிக்கும் உரிமையை பாதுகாத்தல் என்று மக்களின் பல உரிமைகளை இங்கே பிரகடனம் செய்கின்றது. இந்த அடிப்படை உரிமைகளுக்கு விரோதமாக எந்தச் சட்டங்களையும் மத்திய மாநில சட்ட மன்றங்கள் இயற்ற முடியாது. அப்படி உருவாக்கப்படும் சட்டங்களை அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று இரத்து செய்யும் உரிமை இந்திய உயர்நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதி மன்றங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது.இங்கு தான் சட்ட மியற்றும் அமைப்புகளான பாராளுமன்றம் மற்றும் மாநில சட்ட மன்றங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் கருத்து மோதல்கள் ஏற்படுகின்றது. பாராளுமன்றம் இயற்றும் ஒரு சட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று கருதினால் நீதிமன்றங்கள் இரத்து செய்யலாம். உதாரணத்திற்கு இட ஒதுக்கீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அரசியல் சாசனம் அனைவருக்கும் சம வாய்ப்பிற்கு உறுதி அளிக்கின்றது. மத்திய அரசு குறிப்பிட்ட இனத்திற்கு இட ஒதுக்கீடு கொடுக்கும் சட்டத்தினைக் கொண்டு வருகின்றது. உடனே அதனை அரசியல் அமைப்புச் சட்டத்தின் சமவாய்ப்புக் கொள்கையின் அடிப்படையில் அது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்ற முடிவிற்கு நீதி மன்றம் வருகின்றது. பாராளுமன்றம் உடனே அரசியல் சாசனத்தினை திருத்தி பின் தங்கிய மக்களுக்கு ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்கின்றது. இத்தகைய திருத்தங்களை பாராளுமன்றம் அரசியல் சாசனத்தில் செய்யலாமா என்றும் பிரச்சனைகள் ஏற்பட்டது. உச்ச நீதிமன்றம் அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களை மாற்றாத வகையில் திருத்தங்கள் செய்யலாம் என்று சொல்கின்றது. 
IV.அரசுகள் பின்பற்ற வேண்டிய கொள்கைகள்
                  அடிப்படை உரிமைகளை அரசு மறுக்க முடியாது. நெருக்கடி நிலைக் காலத்தில் தற்காலிக நிறுத்தம் வேண்டுமானால் செய்யப்படலாம். ஆனால் அரசு பின்பற்ற வேண்டிய கொள்கைகள் அப்படியல்ல. அரசின் நிதி நிலை போன்ற பல விவகாரங்களைப் பொறுத்து அரசு இந்தக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி,  மதுவிலக்கு, பல காந்தியக் கருத்துக்கள் போன்ற பல விசயங்கள் இதில் சொல்லப்படுகின்றன. 
V.மத்திய அரசு.
             இது மத்திய அரசின் அமைப்பு பற்றிக் கூறுகின்றது. பெயரளவு தலைவராக குடியரசுத் தலைவர் என்ற பதவி உருவாக்கப்படுகின்றது. அரசியல் சாசனப் படி மக்களவையில்  பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் பிரதமாராக இருப்பார் என்றும், ;பிரதம மந்திரி தலைமையிலான மந்திரிசபையின் ஆலோசனைப் படி குடியரசுத் தலைவர் ஆட்சி செய்ய வேண்டும் என்றும் அரசியல் சாசனம் கூறுகின்றது. பிரிட்டிஷ் நாடாளுமன்ற மரபுகளை ஒட்டி  இந்த இந்திய நாடாளுமன்ற நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அத்தியாயத்தில் குடியரசுத்தலைவர் துணைத் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது போன்ற நடைமுறைகள் விளக்கப்படுகின்றன. இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் இந்திய கணக்குத் தணிக்கையாளர் ஆகிய அமைப்புகளைப் பற்றியும் நீதிபதிகள், கணக்குத் தணிக்கையாளர் போன்றவர்களை நியமனம் செய்தல், உயர் நீதி மன்றத்திலிருந்து செய்யக்கூடிய சில அப்பீல்கள் பற்றியும் பேசப்படுகின்றது. 
VI.மாநில அரசுகள் 
            6 வது அத்யாயமாக வருவது மாநில அரசுகளின் நிர்வாக அமைப்பு. மாநில அரசின் தலைவராக கவர்னர் இருப்பார். மாநில அரசின் அனைத்து நடவடிக்கைகளும் கவர்னர் பெயராலேயே மேற்கொள்ளப்படுகின்றன. கவர்னருக்கு ஆலோசனை சொல்ல சட்ட மன்ற பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற நபர் முதல்வராக இருப்பார். கவர்னர் மந்திரிசபையின் ஆலோசனைப் படி செயல்பட வேண்டும் என்பதெல்லாம் இந்த அத்தியாயத்தின் பிரிவுகளில் விளக்கப்படுகின்றது. 
VII.பார்ட் பி மாநிலங்கள்
          இந்த அத்யாயத்தில் சுதேச சமஸ்தானங்களாக இருந்து இந்தியாவுடன் இணைந்த பகுதிகள் பற்றிப் பேசப்படுகின்றது. 1956 மாநில மறுசீரமைப்புச் சட்டத்தினால் இந்த சுதேச சமஸ்தானங்கள் சீரமைக்கப்பட்டு பல மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு விட்டது. எனவே இந்தப் பகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டது. 
VIII.மத்திய ஆட்சிப்பகுதிகள் 
            இது பாண்டிச்சேரி போன்ற மத்திய நேரடி ஆட்சிப் பகுதிகள் பற்றியது. பாண்டிச்சேரி அரசியலைப்புச் சாசனம் அமலுக்கு வந்த பின்னர் தான் இணைந்தது. ஆனால்தலைநகர்ப் பிரதேசமான தில்லி முதலிய பகுதிகள் மத்திய அரசின் நேரடி ஆட்சியின் வசம் வைக்கப்பட்டது. இந்தப் பகுதிகளின் நிர்வாகம் பற்றி மத்திய ஆட்சிப் பகுதிகள் பற்றிய அத்யாயம் தெரிவிக்கின்றது. 
IX.உள்ளாட்சிகள்
          உள்ளாட்சிகளுக்கு  சரியான மதிப்பு கிடைத்தது இராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது தான். உள்ளாட்சித் தேர்தல்கள் கட்டாயமாக்கப்பட்டு அவைகளுக்கு என்று சில துறைகளும் ஒதுக்கப்பட்டது. அரசியல் சாசனத்தின் 11 வது 12 வது அட்டவனைகள் கிராம, நகராட்சி அமைப்புகள் கவனிக்க வேண்டிய விவகாரம் பற்றிப் பேசுகின்றது. கிராம சுயராஜ்யம் பற்றிய காந்தி கனவின் ஒரு பகுதி நனவாகியிருக்கின்றது என்று சொல்லலாம். 
X.பழங்குடியின மலைவாழ் மக்கள் பகுதிகள் 
                 நாட்டின் பலபகுதிகளில் வாழும் பழங்குடிப் பகுதிகளின் நிர்வாகம் பற்றி இந்தப் பகுதி பேசுகின்றது. அரசியல் சாசனத்தின் 5 மற்றும் 6 வது அட்டவணைகளில் இது விரிவாகப் பேசப்படுகின்றது.
XI.மத்திய மாநில அரசுகளுக்கிடையே அதிகாரப் பங்கீடு 
                 இந்த அத்யாயத்தில் மத்திய அரசு எந்தச் சங்கதிகள் பற்றிச் சட்டம் இயற்றலாம் மாநில அரசுகள் எந்தச் சங்கதிகள் பற்றிச் சட்டம் இயற்றலாம். பொதுப் பட்டியலில் வைக்கப்படுபவை எவை என்பது பற்றி கூறப்பட்டுள்ளது. இராணுவம், இராணுவக் குடியிருப்புகள், வெளியுறவு, இரயில்வே போன்ற பல விசயங்களில் மத்திய அரசு மட்டுமே சட்டம் இயற்ற முடியும். இது போன்ற 97 சங்கதிகள் மத்திய அரசின் வரம்பிற்கு உட்பட்டவை. சட்ட ஒழுங்கு, காவல்துறை, தண்ணீர், விவசாயம் போன்ற 66 விசயங்களில் மாநிலங்கள் மட்டுமே சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றவை. இது தவிர குற்றவியல் சட்டம், விலைவாசிக் கட்டுப்பாடு, மின்சாரம், தொழிற்சாலைகள், காடுகள் போன்ற 47 சங்கதிகளில் மத்திய மாநில அரசுகள் கூட்டாக சட்டமியற்றும் அதிகாரம் பெற்றுள்ளன. இந்தப் பொதுப்பட்டியலில் மத்திய அரசின் சட்டங்களுக்கு விரோதமாக மாநில அரசுகள் சட்டமியற்றினால் அவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின்னால் அமலுக்கு வரும். 
XIIமத்திய மாநில அரசுகளின் சொத்துக்கள், ஒப்பந்தங்கள், வழக்குகள்:
          இந்த அத்யாயத்தில் மத்திய மாநில அரசின் சொத்துக்கள் பற்றி ஒப்பந்தங்கள், வழக்குகள் யார் பெயரால் செய்யப்படவேண்டும் என்பது பற்றி கூறுகின்றது. 
XIIIஇந்தியாவின் உள்நாட்டு வணிகம், வியாபாரம் 
           இந்தியாவில் மாநிலங்களுக்கிடையில் நடைபெறும் வணிகத்தினைப் பற்றி இந்தப் பகுதியில் பேசப்படுகின்றது.மாநிலங்களுக்கு இடையே ஆன வணிகத்தினை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. மற்ற மாநில பொருட்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு தரப்பட்டுள்ளது. 
XIVமத்திய மாநில அரசுகளின் அரசுப் பணிகள்
           இந்தப் பகுதியில் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் மற்றும்  மாநில பணியாளர் தேர்வாணையங்கள் பற்றிக் கூறப்படுகின்றது. 
                    
XV. மத்திய அரசு மாநில அரசின் தேர்தல்கள்              
          இந்தியத்தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. குடியரசுத்தலைவர் துணைத் தலைவர் தேர்தல்கள் நாடாளுமன்றத்  தேர்தல்கள்,  மாநில சட்ட மன்றத் தேர்தல்கள் ஆகியவை இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகின்றன. சில பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் தேர்தல் ஆணையம் செம்மையாகவே தன் பணியைச் செய்து வருகின்றது என்று கூற வேண்டும்.  
XVI.தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகளுக்கான சில சிறப்பு உரிமைகள்
              தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு  பாரளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் ஒதுக்கீடு, ஆங்கிலோ இந்தியர்களுக்கான ஒதுக்கீடு பிற்படுத்தபட்ட சாதியினருக்கான ஆணையம் போன்ற விசயங்கள் இந்தப் பாகத்தில் விவரிக்கப்படுகின்றது. 
XVII.மத்திய மாநில அரசுகளின் அலுவல் மொழி
             மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தியும் ஆங்கிலமும் இருக்க வழிவகை செய்கின்றது. 1963 க்கு பின்னர் இந்தி மட்டுமே அலுவல் மொழி என்று அரசியல் சாசனம் சொன்னாலும் நேரு இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக நீடிக்கும் என்று கொடுத்த வாக்குறுதி இன்று வரை கடைபிடிக்கப்படுகின்றது. இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக 22 இருக்கின்றன. 
XVIII.நெருக்கடி காலத்திற்கான வழிவகைகள் 
               இந்தியாவின் பாதுகாப்பிற்கு வெளிநாட்டு காரணிகளாலோ உள்நாட்டுக் குழப்பத்தாலோ ஆபத்து நேரும் போது குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்யலாம். நெருக்கடி நிலை காலத்தில் அடிப்படை உரிமைகள் இரத்து செய்யப்படுகின்றது. மாநில அரசுகளுக்கு எந்த விசயம் பற்றியும் மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கலாம். மாநில அளவில் மத்திய அரசின் நேரடியாட்சிக்கும் வகை செய்யப்பட்டுள்ளது. அரசியல் சாசனம் செயலிழந்து விடும் மாநிலங்களில் மாநில ஆட்சி கலைக்கப்படலாம். கவர்னர் ஆட்சி பிரகடனம் செய்யப்படலாம். 
XIX.இதரவிவகாரங்கள்
            இந்தப் பகுதியில் குடியரசுத் தலைவர் கவர்னர் ஆகியோருக்கு பதவிக்காலத்தில் வழக்குகளிலிருந்து பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. இன்னும் சில சொல்லப்படாத விசயங்கள் பற்றிப் பேசுகின்றது. 
XXஅரசியல் சாசனத் திருத்தம்
            இந்தப் பகுதியில் இந்திய அரசியல் சாசனம் எப்படித் திருத்தப்படலாம் என்று கூறுகின்றது. மாநில உரிமைகளை பாதிக்கும் விவகாரங்களில் பாதி மாநில சட்ட மன்றங்கள் அரசியல் சாசனத் திருத்தத்திற்கு ஆதரவு தர வேண்டும். மற்ற விவகாரங்களில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தால் போதும்.
XXI, XXII .தற்காலிக மற்றும் சிறப்பு மாறும் நிலைக்கான வழிவகைகள்
              அரசியல் சாசனம் அமலுக்கு வரும் காலகட்டத்தில் இடைக்கால ஏற்பாடுகளைப் பற்றி இந்தப் பிரிவுகள் பேசுகின்றன. கடைசிப்பகுதி இந்தியின் அதிகாரப் பூர்வ மொழிபெயர்ப்பு பற்றிப் பேசுகின்றது. 
           இது தான் இந்திய அரசியல் சாசனம். இந்திய அரசியல் நிர்ணய சபை 1946 ல் இந்திய அரசியல் சாசனம் எழுதும் தனது வேலையைத் தொடங்கியது. டாக்டர் இராஜேந்திர பிரசாத் தலைமையில் இயங்கிய இந்த அவை 1949 நவம்பரில் வரைவு இந்திய அரசியல் சாசனத்தினை அங்கீகரித்தது. இந்திய அரசியல் சாசன வரைவுக் குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கார் இருந்தார். இந்த வரைவுக்குழுவிற்கு நீதிமான் பெனகல் நரசிங்கம் ரா ஆலோசகராக இருந்தார். இந்திய அரசியல் சாசனம் உலகின் பல நாடுகளின் அரசியல் சாசனங்களின் கூறுகளை ஆராய்ந்து அவைகளின் சிறப்பம்சங்களை உள்வாங்கி அமைந்திருக்கின்றது. மேலும் அரசியல் சாசன சபையில் ஜவஹர் லால் நேரு கொண்டு வந்த அரசியல் சாசனத்தின் குறிக்கோள் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் இந்த அரசியல் சாசனம் அமைந்துள்ளது. அரசியல் சாசனம் 1950 ல் ஜனவரி 26 முதல் அமலுக்கு வந்தது.எனவே ஒவ்வொர் ஆண்டும் ஜனவரி 26 குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்திய  அரசியல்சாசனம் அமலுக்கு வந்த பின்னர் நூற்றுக்கணக்கான திருத்தங்களைக்  கண்டு விட்டது.( பொது பண்ட மற்றும் சேவை வரி சட்ட முன்வரைவு 122திருத்தமாக காத்துக் கொண்டிருக்கின்றது) ஆனால் இந்திய ஜனநாயகம் நிலைத்திருக்கின்றது. சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்கள் கனவு கண்ட ஒரு உண்மையான மக்களாட்சியை நாம் இன்னமும் அடையாமல் இருக்கலாம். ஆனால் குறைபாடு உள்ளதாக இருந்தாலும் ஏராளமான போராட்டங்களுக்கு பின்னர் இந்திய ஜனநாயகம் நிமிர்ந்து நடை போடுகின்றது என்ற உண்மையை மறுக்க முடியாது. 

Tuesday, October 20, 2015

                                                 அது என்ன ஐ எஸ் ஐ எஸ் 
       ISIS - இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் லெவண்ட். ஒரு நடுங்க வைக்கும் நாடு உருவாகி வருகின்றதா என்ற அச்சம்  உலகெங்கும் ஏற்பட்டுள்ளது. போரினால் சிதைவடைந்து போன ஈராக்கும் உள்நாட்டுப் போர்கள் நடந்து கொண்டிருக்கும் சிரியாவும் மதவெறி கொண்ட தீவிரவாதிகளின் விளைநிலங்களாக மாறி வருகின்றன. ஈராக்கில் ஒரு அரசாங்கம் இல்லாமல் இருப்பதும் சிரியா அரசாங்கம் எதிர்க்கட்சிகளுடன் நடத்திக் கொண்டிருக்கும் போர்களும் மதத் தீவிரவாத இயக்கம் ஒன்று ஒரு அரசாங்கத்தினை ஏற்படுத்தும் அளவிற்கு சூழ்நிலைகளை உண்டாக்கியுள்ளது. 
             அரேபியா வகாபி அல்லது சலாபி தீவிர முஸ்லிம் மதக் கோட்பாட்டு பிரிவின் கொள்கைகளின் அடிப்படையில் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்பு அமைந்துள்ளது. வகாபி முஸ்லிம் பிரிவு பழைமை வாத முஸ்லிம் கோட்பாட்டினைப் பின்பற்றுபவர்கள். அந்த அடிப்படையில் முஸ்லிம் காலிபா அரசாங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளதாக ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு கூறுகின்றது. Abu Bakr al-Baghdadi  அபு பக்கர் அல் பாக்தாதி யை  இந்த அமைப்பு அமைத்துள்ள அரசாங்கத்தின் காலிபா என்றும் இந்த அமைப்பு அறிவித்துள்ளது. 
            அடிமை முறையை ஆதரிக்கும் இந்த அமைப்பு தன்னுடைய நாட்டிற்கு இஸ்லாமிக் ஸ்டேட் என்று பெயரிட்டுள்ளது. குரான் ஒன்றே முதன்மையானது என்று கூறும் இந்த அமைப்பு  குரானின் சட்டங்களை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கவும் செய்கின்றது. உலகின் எந்த முஸ்லிம் அமைப்புகளும் இந்த அமைப்பின் சித்தாங்களை ஆதரிக்கவில்லை. குரான் பற்றி இந்த அமைப்பு கூறும் விளக்கங்களை ஏற்கவும் இல்லை. 
            குழுவாகப் படுகொலை செய்தல்,  முஸ்லிம் அல்லாத இனக்குழுப் பெண்களை கற்பழித்தல், அவர்களை அடிமையாகப் பிடித்து வைத்தல் , விற்பனை செய்தல் என மனித சமுதாயம் வெறுக்கும் அனைத்து ஈனச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர் இந்த அமைப்பினர்.  கற்பழிப்பு புனிதப் போரின் ஒரு பகுதி என்று இந்தத் தீவிரவாதக் குழு கருதுகின்றது. உலகெங்கிருந்தும் காலிபா அரசாங்கம் ஒன்றினை உருவாக்க விரும்பும், தீவிரவாதச் சிந்தனை கொண்ட இளைஞர்கள் இப்போது ஐ எஸ் ஐ எஸ் ஆல் ஈர்க்கப்படுகின்றனர். 
           உலகின் அனைத்து இஸ்லாமிய அரசுகளும் காலிபாவிற்கு கட்டுப்பட்டவை. காலிபாவின் எல்லைகள் விரிவாகும் போது இஸ்லாமிய அமீரகங்கள், நாடுகள், குழுக்கள் அனைத்தும் துடைத்தெறியப்படும் என்று இந்த அமைப்பு கூறுகின்றது. ஐ எஸ் ஐ எஸ் சின் எல்லைகள் ஈராக்கையும் சிரியாவையும் தாண்டி நீளுகின்றன. பல மதப் பயங்கரவாத அமைப்புகள் தற்போது இந்த அமைப்பினை ஏற்றுக் கொள்கின்றன. 
         இந்த அமைப்பின் பிண்ணனியில் அமெரிக்கா இருப்பதாக பலர் சந்தேகப்படுகின்றனர். மத்தியக் கிழக்கில் அமைதியின்மையை ஏற்படுத்த அமெரிக்கா இந்த அமைப்பினைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். துருக்கியின் ஆதரவு இந்த அமைப்பிற்கு இருப்பதாகக் கூறப்படுகின்றது. சவுதி அரேபியா அரசு மறுத்த போதிலும் சவுதி அரேபியா அரசின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த அமைப்பினை எதிர்க்க அமெரிக்கா ஒரு கூட்டமைப்பினை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சிரியாவிற்கு ஆதரவாக களமிறங்கியுள்ள இரஷ்யா ஐ எஸ் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. சிரியாவின் தற்போதைய ஆசாத் அரசிற்கு மேற்கு நாடுகள் எதிராக இருக்கின்றன. இது மத்திய கிழக்கில் குழப்பமான, பயங்கரமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. 
             இந்த தீவிரவாத அமைப்பில் இந்தோனிசியாவிலிருந்து சுமார் 50 பேரும் இந்தியாவிலிருந்து சுமார் 18 பேரும் இருக்கலாம் என்று சில மதிப்பீடுகள் கூறுகின்றன. இந்தோனிசியா முஸ்லிம் மக்கள் தொகையில் உலகத்தில் முதலிடத்தில் இருக்கின்றது. இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. இந்த இரண்டு குடியரசு நாடுகளின் முஸ்லிம்கள் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதத்தினை நிராகரித்துவிட்டனர் என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். ஜனநாயகம் என்கின்ற வார்த்தையை வெறுத்து காலிபா என்கின்ற பழைமை வாத அரசாங்கம் ஒன்றினை உருவாக்கும் தீவிரவாத எண்ணங்களுக்கு முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை. 
               சதாம் ஹூசேனின் அரசாங்கத்தினை ஒழித்துக் கட்ட மிகக் குறுகிய காலமே எடுத்துக் கொண்ட அமெரிக்கா சுமார் 20000 எண்ணிக்கை கொண்ட ஒரு சிறிய படைப் பிரிவினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஆச்சர்யம் தான். எல்லா ஜனநாயக அரசாங்கங்களுக்கும் சவால் விடும் இந்தச் சிறிய குழு எப்படி போர்த்தளவாடங்களைப் பெறுகின்றது. அரசு நடத்துவதற்கான நிதி வசதியைப் பெறுகின்றது என்பதை எல்லாம் கவனிக்கும் போது மத்தியக் கிழக்கில் அமெரிக்காவின் சதுரங்க விளையாட்டின் ஒரு சிறிய சிப்பாய் தான் இந்த ஐ.எஸ் ஐ எஸ் எனத் தோன்றுகின்றது. ஆனால் ஒசாமா பின் லேடன் போல் இந்த ஐ எஸ் ஐ எஸ் அமைப்பும் அமெரிக்காவின் தலைவலி ஆகும் அபாயம் இருக்கின்றது. என்ன நடந்தாலும் தங்களது ஆயுத வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் என்று நினைக்கும் அமெரிக்க ஆயுத வியாபார நிறுவனங்கள் எந்தப் போரினையும் கழுகுகள் மாதிரி எதிர்பார்த்துக் காத்துக்கிடப்பது மாற்ற முடியாத உண்மையாக இருக்கின்றது .

Thursday, September 17, 2015

               
                            காந்தி என்ற நதியும் மோடி என்ற நீர்க்குமிழியும் 

   வாழ்க்கை நதி ஒடிக்கொண்டே இருக்கின்றது. கடந்துபோனவைகளை வாழ்க்கை பொருட்படுத்துவதே இல்லை. எத்தனையோ பேரரசர்கள், மிகப் பெரிய மனிதர்கள் மறைந்து போய்விட்டார்கள். வாழ்க்கை நதியில் அவர்களும் சிறு துளிகளே. அவர்களது தலைமை அந்தந்தக் கால கட்டங்களுக்கு பொருத்தமாக இருந்திருக்கலாம். அடுத்து வரும் காலங்களில்  புதிய அமைப்புகள் அவர்களை விமர்சனம் செய்கின்றார்கள். 
             காந்தி மாமனிதராகப் போற்றப்பட்டது ஒரு காலம். இன்றைக்கு அவர் விமர்சனம் செய்யப்படுகின்றார். விமர்சனம் செய்பவர்களோ அரைகுறை அறிவு படைத்தவர்கள். அவர்களிடம் விளக்கவும் வழியில்லை. காந்தி போன்ற தலைவர்கள் அந்தச் சமுதாய நிலைமைகளைப் பிரதிபலிக்கின்றார்கள் என்று நான் கருதுகின்றேன். சுதந்திர இந்தியாவிற்கு முந்தைய காந்தி கால சமூகம் வறுமையில் வாழ்ந்திருக்கலாம். கல்வியறிவில்லாமல் இருந்திருக்கலாம். 
         ஆனால் அவர்கள் ஆன்மீகம், அன்பு, அறிவின் மீதான காதல் இவற்றினைக் கொண்டிருந்தார்கள் என்பதை காந்தியை தலைவராக  ஏற்றுக் கொண்ட சமூக நிகழ்வு பிரதிபலிக்கின்றது. தலைவர்களின் உணர்வுகளை மக்கள் ஏற்பதில்லை. சமூகத்தின் தன்மையை தலைவர்கள் பிரதிபலிக்கின்றார்கள். ஹிட்லர் அப்போதைய ஜெர்மனி யை பிரதிபலித்தார். போர்வெறியும் இனவெறியும் கொண்ட மக்கள் அதிக எண்ணிக்கையில் அங்கு இருந்திருக்க வேண்டும். 
                    மோடி இன்றைய சமூகத்தினைப் பிரதிபலிக்கின்றார் . இன்றைய இந்திய சமூகம் ஒரு பணத்தினை நேசிக்கும் சமூகமாக மாறி விட்டது. உண்மை எல்லாம் இங்கு இரண்டாம் பட்சம் தான். அதனைத் தான் மோடி பிரதிபலிக்கின்றார். அவருடைய வாக்குறுதிகள் பணம், முன்னேற்றம், சொகுசு சம்பந்தமானது. அதை இந்திய மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். காங்கிரசும் வளர்ச்சியைப் பற்றித் தான் பேசியது. ஆனால் மோடியின் நடைமுறைச் சாத்தியமில்லாத வாக்குறுதிகள் போல அல்லாமல் காங்கிரஸ் நிதானமாக பேசியது. இது வாக்காளார்களைக் கவரவில்லை. அவர்கள் காங்கிரஸ் 60 வருடங்களாக ஆண்டு ஏமாற்றி விட்டதாக நினைத்தார்கள். 
       சீக்கிரம் பலருக்கு மறந்து விடுகின்றது. பசியும் பஞ்சமும் உடுத்த ஆடைகளும் இன்றி இருந்த இந்தியா பலருக்கு மறந்து விட்டது. பசி தீர்ந்து விட்டது. பகட்டான வீடுகள் சிலருக்கு கிடைத்து விட்டது. எனவே அவர்கள் இப்போது காந்தி யார் என்று கேட்குமளவிற்கு உயிரோட்டமுடையவர்கள் ஆகி விட்டார்கள். 
                  பசி நிறைந்த பூமியில் மதம் இரண்டாம் பட்சமாக இருந்தது. பசி தீர்ந்து தொழில் வளர்ச்சியடைந்து இந்தியாவின் பிரச்சனைகள் குறைந்து வருவதால், இப்போது காங்கிரஸ் என்ன செய்தது என்ற கேள்வி வருகின்றது. மதம் வருகின்றது. வரலாறு மறந்து விடுகின்றது. ஆங்கில ஆட்சியில் 10 வருடத்திற்கு ஒரு பஞ்சம் வந்தது மறந்து விட்டது. புதியவர்கள் நேற்றுப் பிறந்தவர்களுக்கு வரலாறு தேவைப்படுவதில்லை. இன்றைய தேதிக்கு இந்தியா உலகின் உணவு தானிய உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருப்பது அவர்களின் கடைக் கண்களால் கூடக் கவனிக்கபடுவதில்லை. 
         அவர்கள் அடிமையாய் இல்லை. அவர்கள் பசியுடன் இல்லை. பிறந்தவுடன் ஏன் எங்களுக்குச் சிறகு முளைக்கவில்லை. அதற்கு காங்கிரஸ் தானே காரணம் என்கின்றார்கள். சுதந்திர இந்தியாவில் இப்போது மதம் முக்கியத்துவம் ஆகிவிட்டது. காங்கிரசார், இடதுசாரிகள் சுபாஷ் சந்திர போஸ் போன்ற மதச் சகிப்புத் தன்மை கொண்ட வலதுசாரிகள் இந்திய விடுதலைப் போராட்டத்தினை முன்னின்று நடத்தினார்கள்.       
               அந்தச் சுதந்திரப் போராட்ட வரலாற்றினை இன்றைக்கு எப்படி வேண்டுமானாலும் திரிக்கலாம் என்று மோடி நினைக்கின்றார். மக்கள் அதை ஏற்றுக் கொள்கின்றார்கள். இப்போதைய தலைமுறை உண்மைகளை பார்க்கவும் படிக்கவும் விருப்பமற்று இருக்கின்றது என்பது தான் காரணம். 
      மோடி இன்றைய வெளிப்பகட்டான இளைஞர்களைப் பிரதிபலிக்கின்றார்கள். இன்றைய இளைஞர்களுக்கு பொய் பேசுவது ஒரு சாதரண விவகாரம். இன்றைய பாணியில் ஆடை உடுத்துவது முக்கிய விவகாரம். நவீன கருவிகளைக் கையாள்வது முக்கிய விவகாரம். அதில் உண்மை பேசுவது என்பது சாதரண விவகாரம். உண்மையெல்லாம் ஒரு பிரச்சனை அல்ல. 
                தட்சீலம் பீகாரில் இருந்தால் என்ன தமிழ்நாட்டில் இருந்தால் ? முதல் இந்திய விடுதலைப் போரில் காங்கிரஸ் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ? இந்து முஸ்லீம் பிரிவினை காங்கிரஸ் தூண்டி விட்டது என்றால் கைதட்ட ஆயிரக்கணக்கில் ஆட்கள் வந்தால் பேச வேண்டியது தானே. இந்த உள்ளே சரக்கற்ற இளைஞர்கள் இருக்கும் வரை மோடி இராஜாதான் . 
                  ஆனாலும் காந்தியை விமர்சனம் செய்யும் முன் அவரைக் கொஞ்சமாவது தெரிந்து கொண்ட பேசலாம். நேதாஜியை பகத்சிங்கை  என எல்லாருமே அடிப்படையில் அப்போதைய இந்திய மக்களின் ஆன்மாவை பிரதிபலித்தார்கள்.    மோடி இன்றைய மேம்போக்கான பகட்டான போலியான சமூகத்தினைப் பிரதிபலிக்கின்றார்.       
                  இலட்சக்கணக்கான சாதரண மக்கள் காந்தி சொன்னதற்காக வீதிக்கு வந்தார்கள். துப்பாக்கி குண்டுகளைச் சந்தித்தார்கள். சிறையில் வாடினார்கள். அந்த சாதரண மக்களின் போராட்டம் மோடியின் வெற்றியால் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனியின் ஆட்சிக்கு அப்புறம் இப்போது இந்திய முதலாளிகளின் ஆட்சியின் கீழ் இந்தியா வந்திருக்கின்றது. அதற்கு மோடி ஒரு கையாள் ஆக இருந்திருக்கின்றார்.      
           காந்தியுடன் ஒப்பிடும் போது மோடி ஒரு நீர்க்குமிழி. ஆளுமைத் திறன் அற்ற ஒரு பகட்டான இளைஞர் கூட்டம் நீர்க்குமிழியை நம்பி  தேசத்தினை எந்தத் திசையில் நகர்த்திச் செல்கின்றது என்பதை  சில கவனிக்கும் கண்களுடையவர்கள் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் ! என்ன சொல்ல  !! 

Sunday, August 3, 2014

2016 சட்டமன்றத்தேர்தல்கள் நெருங்குகின்றன. அதிமுக தேர்தலுக்கு தயாராகின்றது காங்கிரஸ் என்ன செய்து கொண்டிருக்கின்றது தேர்தலுக்கு தயாரா? அல்லது கூட்டணிகளை எதிர்பார்த்து வேட்பு மனுத்தாக்கல் வரை காத்திருந்து யாரும் ஒரு இருபது சீட்கள் கூட கொடுக்க முன்வரா விட்டால் கிடைக்கின்ற வேட்பாளர்களை வைத்து தேர்தலைச் சந்திக்கும் வழக்கமான பார்முலா தானா?  அமெரிக்காவின் உள்நாட்டு போரில் சொல்லப்பட்ட பிரபலமான வாக்கியம் ஒன்று நினைவுக்கு வருகின்றது. ஒன்றாகப் போரிடாவிட்டால் தனித்தனியாக தூக்கிலிடப்படுவீர்கள். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் ஜாம்பவான்கள் தான். ஆனால் தனித்தனியாக தூக்கில் தொங்கத் தான் தயாராக இருக்கின்றார்கள் என்று மக்கள் நினைக்கின்றார்கள். தொண்டர்களின் ஆதரவு பெற்ற அய்யா ஜி.கே.வாசன், துணிச்சலான கருத்துக்களால் மக்களின் மத்தியில் ஆதரவு பெற்றிருக்கும் ஈ.வி.எஸ் இளங்கோவன். ப.சிதம்பரம் அவர்கள் பிரபு அனைவரையும்  அனுசரித்து செல்லும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தற்போதைய தலைவர் ஞானதேசிகன்அவர்கள் மற்றும் எத்தனை பேர்கள் சுதர்சன நாச்சியப்பன், திருநாவுக்கரசர் , ஜே.எம். ஹாரூன் விடியல் சேகர் போன்ற முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மாணிக் தாகூர் ஜோதிமணி போன்ற காங்கிரஸ் துணைத்தலைவர் இராகுலின் அன்பிற்குரிய இளைய முகங்கள் அமெரிக்கை நாரயணன், பீட்டர் அல்போன்ஸ் கோபண்னா போன்று மீடியாக்களில் போரடிக்கொண்டிருக்கும் முகங்கள்.நூற்றுக்கணக்கான,  மக்கள் மத்தியில் அறிமுகமான முகங்கள்  இரண்டு நாள் தான் விருப்ப மனு வாங்கப்பட்டது எத்தனை பேர் மனுக் கொடுத்தார்கள் 1000 பேருக்கு மேல் ! காங்கிரஸிற்கு தேர்தலில் நிற்க எங்கே ஆள் என்று கேட்ட போது ஆயிரக்கணக்கான காங்கிரசார் ஒடி வந்தார்களே. பொய்யும் மெய்யும் கலந்த ஒரு மோசடியான பிரச்சாரத்திற்கு காங்கிரஸ் பலிகடா ஆக்கப்பட்ட போதும் காங்கிரஸ் மீது தமிழ்நாட்டில் 18 இலட்சம் மக்கள் நம்பிக்கை தெரிவித்து வாக்களித்தார்கள். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் போன்ற அமைப்புகள் காங்கிரசிற்கு வாக்களித்தனவே. இத்தனை நாட்களாக கூட்டணி என்ற பெயரிலேயே தமிழ்நாடு காங்கிரஸ் காலம் தள்ளிக் கொண்டிருந்தது. அந்தக் காலம் மலையேறிவிட்டது. அமைப்புகளைப் பலப்படுத்தாமல் பத்திரிக்கைகளின் தவறான பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்காமல் கட்சிக்கூட்டங்களை நடத்தாமல் இப்படி காலம் ஒடினால் இந்த 18 இலட்சம் வாக்குகளும் கேள்விக்குறியாகிவிடும். காங்கிரசு கட்சியே கேலிக்குரியதாகி விடும் என்று எச்சரிக்கின்றேன். ஆட்சியின் மீதான அதிருப்தியை வாக்குகளாக மாற்றுவது எதிர்க்கட்சி வளர்வதற்கான வழி.இந்த மீடியாயுகத்தில் காங்கிரஸ் பாயும் புலியாக இருந்தால் மட்டுமே மீடியாவின் கடைக்கண்ணிலாவது பட முடியும். காங்கிரசின் தூங்கிக் கொண்டிருக்கும் அனைத்து அமைப்புகளையும் தட்டி எழுப்புங்கள். இளைஞர் காங்கிரஸ் மாணவர் காங்கிரஸ் தொழிலாளர் அமைப்புகள் சிறுபான்மையோர் தலித் அமைப்புகள் வழக்குரைஞர் அமைப்புகள். இந்த அமைப்புகளை ஒருங்கினைத்து செயல்பட வேண்டியது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கடமை. மாநிலங்களவை மக்களவை சட்டமன்றம் உள்ளாட்சிகள் என வாய்ப்புகள் ஏராளம் ஏன் உட்கட்சி சண்டை இருக்கின்றது என்று மக்கள் நினைக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒன்றாகச் சேர்ந்து யுத்தம் நடத்துங்கள் அல்லது தொடர்ந்து தோல்வி அடைய வேண்டியது தான். மன மாச்சரியங்களை களைந்து தோள் மேல் கை போட்டு பணிகளை யாராவது மூத்த தலைவர் தொடங்கினால் தொண்டர்கள் அந்தத் தலைவரின் பாதம் பணிவார்கள். இன்னும் 20 மாதங்களே இருக்கின்றன. காங்கிரஸ் இப்போதே பணியினைத் தொடங்கினால் கணிசமான வாக்குகளையும் சில தொகுதிகளையும் வெல்லலாம்.பத்துவருடம் போராடினால் இழந்த ஆட்சியை மீட்கலாம். அரசியல் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கின்றன. தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிப்படைத்த இரு தலைவர்கள் ஒய்வு பெறும் வயதை கடந்து விட்டார்கள். அவர்கள் கையில் இனிமேலும் பொறுப்புகளை கொடுக்க தமிழக மக்கள் தயாராக இல்லை. காங்கிரஸ் தலைவர்கள் கூட்டாக எப்படி நடந்து கொள்ளப்போகின்றார்கள் மீடியாவை தம் வசமாக்கப் போகின்றார்களா என்பதையெல்லாம் பொருத்து காங்கிரசின் எதிர்காலம் இருக்கப் போகின்றது. மீண்டும் எச்சரிக்கின்றேன். இன்னும் 20 மாதங்கள் தான் இருக்கின்றது. ஆனால் 20 மாதங்கள் அரசியலில் மிக நீண்ட காலம். மக்கள் மனதினை வெல்லும் யுத்தத்தினை தொடங்குங்கள் காங்கிரஸ் தலைவர்களே நாங்கள் தயார்

Saturday, June 28, 2014

புராதன காலத்து இந்திய குற்றவியல் சட்டத்தின் சில பிரிவுகள் என்னை ஆச்சரியப்படுத்துகின்றன. அரசு ஊழியர்களைப் பணி செய்யாமல் தடுத்தலைக் குற்றமாகக் கருதும் பிரிவுகள்  அவற்றில் சில. அன்னிய நாட்டிலிருந்து வந்த வெள்ளையர்களின் பாதுகாப்பிற்காக கொண்டு வரப்பட்ட இந்தப் பிரிவுகள் ஏன் இன்னும் நீடிக்கின்றன? சுதந்தர இந்தியாவில் அரசு ஊழியர்கள் கடமையைச் செய்யாமல் இருப்பது அல்லவா குற்றமாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். அப்புறம் இந்தக் பிரிவுகளில் குற்றச் சாட்டப்படுவோர் அரசு ஊழியர்கள் கடமையைச் செய்ய மறுத்ததனாலோ ஆணவத்துடன் செயல் படுவதாலோ கோபம் கொண்டோர் தான். யாரும் அரசு ஊழியர்களின் கடமையை தடுக்கின்ற மாதிரி தெரியவில்லை.இன்றைய அரசு ஊழியர்களின் என் கடன் சம்பளம் வாங்குவது அதைவிட இலஞ்சம் வாங்குவது மக்களை அடிமைகள் மாதிரி நடத்துவது என்று நடந்து கொள்கின்றனர். இவர்களுக்கு இந்த வெள்ளைக்காரன் காலத்து குற்றவியல் சட்டத்தின் சில பிரிவுகள் நன்கு உதவுகின்றன. ஆனால் அரசு ஊழியர்கள் கடமையைச் செய்யாமலிருத்தல் யாராலும் குற்றமாகக் கருதப்படுவதில்லை நல்ல வேடிக்கை தான். நாம் தான் சட்டம் இயற்ற தமிழ்நாடு சட்ட மன்றத்திற்கு 234 பேரையும் இந்திய பாராளுமன்றத்திற்கு 545 பேரையும் அனுப்பி வைக்கின்றோம். அவர்கள் இந்த சட்டத்தினை எல்லாம் ஆய்வு செய்வதில்லையா என்று கேட்கின்றீர்களா? ஆனது ஆண்டுகள் அறுபது ஆனால் இந்த மாதிரியான பிரிவுகள் எந்த உறுப்பினர் கண்ணிலேயும் படவில்லையே?

Wednesday, June 4, 2014


தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் 07.06.2014 கூட்டப்பட இருப்பதாக சில பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன. அந்தக் கூட்டத்தில் அதிமுக அரசின் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டு அதிமுக அரசிற்கு எதிராக மக்கள் கருதும் விஷயங்கள் பற்றி தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும்  1. செயற்கையான  மணல் தட்டுப்பாடு மற்றும் மணல் கொள்ளை சாதரண மக்களை கடுமையாக பாதித்துள்ளது . முக்கிய கனிம வளமான மணல் விற்பனை சீராக இல்லை.தமிழக அரசுக்கு மணல் கொள்ளையர்களை அடக்கும் சக்தி இல்லை என்பதையே இது காட்டுகின்றது.
      2. தமிழ் நாடெங்கும் நிலவும் தண்ணீர் பஞ்சத்தினை போக்க தமிழ்நாடு அரசுக்கு தலைமை தாங்கும் அதிமுக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
        3. புதிதாக அதிமுக அரசு மதுக்கடைகளை திறக்கும் போது அந்தப் பகுதி மக்கள் போராடுவதும் அந்தப் போராட்டங்களை துப்பாக்கி முனையில் நசுக்கி மதுக்கடைகளை திறப்பதும் அதிமுக அரசின் வாடிக்கையாக இருக்கின்றது. ஜெயலலிதா தேர்தல் சமயத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவதாக வாக்களித்தார். அந்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்ற வேண்டும்.
  5.தமிழ்நாட்டில் நீண்ட காலத்திற்கு பின்னர் விவசாயிகளின் தற்கொலைசெய்திகள் வருவது வருத்தமளிப்பதாக உள்ளது. அரசாங்கம் நெல், கரும்பு கொள்முதல் விலைகளை உயர்த்தவும் பால் கொள்முதல் விலையை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6. சிறு தொழில்களையும் விவசாயிகளையும் பாதிக்கும் மின்வெட்டிற்கு தீர்வு காண தமிழக அரசு தவறி விட்டது. ஆட்சிக்கு வந்த 6 மாதத்திற்குள் மின்வெட்டுப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக அதிமுக சொன்னது ஆயின ஆண்டுகள் மூன்று மின்வெட்டு அதிகரித்துள்ளதே தவிர குறைந்தபாடில்லை.
7. தமிழகத்தின் முக்கிய துறைகளில் உள்ள ஆட்கள் பற்றாக்குறையினால் மக்கள் அவதிக்குள்ளாகின்றார்கள். அனைத்து துறைகளில் காலியான பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8. தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை முதல் அனைத்து துறைகளிலும் இலஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. இலஞ்ச ஊழல் தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை இது கண்டணத்திற்குரியது .
9. தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் குடியிருக்கும் இடங்களுக்கு பட்டா வழங்குவதில் மிகுந்த முறைகேடு நடக்கின்றது.
10. தமிழக சாலைகளின் நிலைமை மோசமாகி வருகின்றது. உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை.
11. தமிழக சட்ட ஒழுங்கு நிலைமை மிகவும் சீர் கெட்டுவிட்டது தமிழக முதலமைச்சர் தலைமையில் இயங்கும் போலீஸ் துறை மிகவும் மோசமான முறையில் பணி செய்கின்றது.
12. பாராளுமன்றத் தேர்தலில் பணம் விளையாடியது தான் காங்கிரஸ் தோல்விக்கு காரணம். தமிழகத்தில் பாரதிய ஜனதாவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை என்பதை பாராளுமன்ற தேர்தல்கள் காட்டுகின்றன.
14. வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவிற்கு ஒரே மாற்று காங்கிரஸ் தான். காங்கிரஸ் தலைமையில் வலுவான அணியினை உருவாக்க காங்கிரஸ் முயற்சியெடுக்கும்.
15. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்களின் மீதும் துனைத்தலைவர் இராகுல் காந்தி அவர்களின் தலைமை மீதும் தமிழ்நாடு காங்கிரஸ் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது.

Thursday, May 29, 2014

தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு எல்லாவிதத்திலும் தோல்வி அடைந்து விட்டது. சட்ட ஒழுங்கு மின்வெட்டு மணல் கொள்ளை விவகாரம் சுற்றுச் சூழல் விவசாயிகளுக்கு ஆதரவு என்ற எல்லா பிரச்சனைகளும் தமிழக அரசின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கின்றன. எல்லாப் பிரச்சனைகளையும் இலவசங்களின் மூலமும் பணத்தின் மூலமும் மறைத்திட வரும் தேர்தலில் அதிமுக  முயலலாம். திராவிடம் என்ற பெயரில் தமிழர்களிடத்திலிருந்து ஆட்சியை கைப்பற்றி வைத்திருக்கும் அதிமுக தலைமைக்கும் அதற்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட இன தலைவர்களையும் பார்க்கின்றோம். மேசை தட்டுவதில் தான் இவர்கள்  பாண்டியத்தியம் அடைந்து இருக்கின்றார்கள். அதிமுக அமைச்சர்கள் எம் எல் ஏ க்கள் எம்பிக்கள் பதவிக்காலம் முடிந்தால் கூனர்களாகி விடுவார்கள் என்று நான் நினைக்கின்றேன். பதவிக்காக கொடுக்கும் சிறிய விலைஅவர்களின் தன்மானம். இவர்களைப் பார்த்து ஊர் மட்டுமல்ல அவர்களின் நிழலே சிரிக்கும். தன்மானத்தினை விற்று பதவி வாங்குகின்ற நண்பர்களே ஒர்  சுமை தூக்கும் தொழிலாளி கூட தனது தன்மானத்தினை விட்டுக் கொடுப்பதில்லை. நான் அந்த சுமை தூக்கும் தொழிலாளியிடம் தன்னம்பிக்கையாக வாழ்வது பற்றி அறிந்து கொண்டேன். நீங்கள் உங்கள் தன்மானத்தினை விற்று  வாங்கிய மானங் கெட்ட பதவியின் மூலம் என்ன அறிந்து கொண்டீர்கள் . மக்களுக்கு என்ன செய்தீர்கள் எனக்கு சொல்லுங்கள். அமைதி வளம் வளர்ச்சி யாருக்கு ? பவுலை கொள்ளையடி பீட்டருக்கு கொடு என்ற  ஆங்கிலப் பழமொழியைச் சொல்லி  ஒட்டுக்களை விலைக்கு வாங்கும் அவலம் பற்றி ஒரு நண்பர் வருந்தினார். எனக்கு அப்போது என்ன தோன்றியது தெரியுமா குப்புசாமியை கொள்ளையடி குப்புசாமிக்கு கொஞ்சம் கொடு மீண்டும் குப்புசாமியை கொள்ளையடி என்ற எண்ணம் தான். தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் அதிமுகவின் அரசியல் சதிகளை  வெறுக்கின்றனர். அவர்களுக்கு நல்ல சாலை குடிநீர் ஊழலில்லாத நிர்வாகம் வேண்டும். கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கு பால் விலை ஏற வேண்டும். விவசாயப் பொருட்களின் கொள்முதல் விலை ஏற வேண்டும். ஆனால் நீங்கள் என்ன செய்கின்றீர்கள்  அறியாமையில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களின் ஒட்டுக்களை வறுமையில் வாழும் மக்களின் ஒட்டுக்களை விலைக்கு வாங்குகின்றீர் சுமார் 12 வருடங்களாக ஜெயலலிதா ஆண்டு வருகின்றார். தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றது.1977 ல் இருந்து அதிமுக பல தடவை தமிழகத்தினை ஆண்டு கொண்டிருக்கின்றது. எனக்குத் தெரிந்த பல அரசியல்வாதிகள் பணக்காரர்களாக ஆகிவிட்டார்கள். பெரும் பணக்காரர்களாக. பல இடங்களில் இடம் வாங்கி போடுகின்றார்கள். கம்பெனி அதிபர்கள் ஆகின்றார்களஆடம்பரக் கார்களில் பவனி வருகின்றனர்.  திமுக ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியின் குடும்பம் நன்மையடைவதாக  சொல்கின்றார்கள். பத்திரிக்கை திரையுலகம் எல்லாவற்றினையும் திமுக தலைவரின் குடும்பத்தினர் ஆக்கிரமிக்க முயல்கின்றார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்தால் அதே பழைய பேர்வழிகள் மேலும் மேலும் பணக்காரர் ஆகின்றார்கள். இன்னோவா கார் என்ன ஸ்கார்பியோ என்ன. உள்ளாட்சியிலிருந்து தமிழ்நாடு மாநில அரசு ஏன் மத்திய திட்டங்களைக்கூட விட்டு வைப்பதில்லை. உள்ளூரிலே நூறுநாள் திட்ட பயனாளிகளின் கூலியில் பத்து இருபது திருடுகின்றனர். திருடுவதை விடுங்கள் திறமையாக ஏதாவது திட்டம் தான் தீட்டினீர்களா?  ஒன்றினைச் சொல்லுங்களேன் உங்கள் அறிவினைப் பார்த்து தமிழகம் வியந்த ஒன்றினை .  இந்திய நதிகள் இணைப்பு பற்றி பொதுக்கூட்டங்களில் பேசும் ஜெயலலிதா எத்தனை நீர்ப்பாசன திட்டங்களைச் செய்திருக்கின்றார். மிகச் சாதரண அவிநாசி அத்திக்கடவு நீர்ச்செறிவூட்டும் திட்டம் போன்ற சாதரண திட்டங்களைக் கூட இரண்டு திராவிட அரசுகளும்  ஓரக்கண்ணால் கூடப் பார்க்கவில்லை. திராவிடம் என்று சொல்லிக் கொண்டு மலையாள கர்நாடக ஆந்திரா அரசுகளுடன் மல்லுக்கட்டும் இவர்கள் உள்ளூரில் முதல் மடை கடைமடை விவசாயிகள் மல்லுக்கட்டுவதை தடுக்க முடியவில்லை. பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இன்னும் இருபதாண்டுகளாக பணம் வரவில்லை. நல்ல சாலை பாலம் தண்ணீர் மின்சாரம் நீங்கள் பெருமூச்சுத்தான் விடவேண்டும். சாராயக் கடைகளை அதிகரிப்பது என்றால் இரண்டு கழகங்களும் போட்டி போடுகின்றன. படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று சொன்ன ஜெயலலிதா இன்னும் முதல் படிகூட ஏறவில்லை. பழனிமலை மாதிரி  சாராய மலை என்பதையும் ஜெயலலிதா தேடிக் கொண்டிருப்பார் போலிருக்கின்றது பின்னர் அதில் முதல் படி ஏறுவார்? அதற்குள் சாரய வெள்ளத்தில் சிக்கி தமிழர்கள் மூச்சுத்திணறி சாகப்போகின்றார்கள் ! சாராயவிற்பனை குறைந்தால் தமிழக அரசு கவலையடைகின்றது. மிக நீண்ட காலத்திற்கு அப்புறம் தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலைகள். அரசாங்கம் சிறிய அக்கறை கூட செலுத்தியதாகத் தெரியவில்லை. விவசாயகளின் தற்கொலை பற்றி அமைச்சரவைக் கூட்டம் நடந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? மின்வெட்டு பிரச்சனை சிறு தொழிலதிபர்களை வாட்டி வதைக்கின்றது . முந்தைய அரசு மத்திய அரசு பாகிஸ்தான் அரசு இலங்கை அரசு இராஜராஜ சோழன் அரசு எல்லாவற்றினையும் குறை சொல்லுவதைத் தவிர்த்து மின் உற்பத்திக்கு ஒரு சிறு செங்கல்லை கூட இந்த தமிழக அரசு இந்த இரண்டு வருடத்தில் நகர்த்தியதாகத் தெரியவில்லை. கொத்திப்போடப்பட்டிருக்கும் சாக்கடைகள் நிரம்பிய தமிழகச் சாலைகளின் வழியே செல்லும் போது தமிழகத்தின் இருண்ட எதிர்காலத்தினை நினைத்து பார்க்கின்றோம். பாஞ்சாலி சூதாட்டத்தில் தான் அடகு வைக்கப்பட்டாள் . தமிழன் ரூ500/- கிடைத்தால்  தனது மனைவியை மக்களை நாட்டை கட்டிய கோவணத்தை  அடகு வைத்து விடுவான். அடத் தமிழா திராவிடம் என்ற பெயரில் ஆட்சி திறமையானவர்களிடமிருந்து கைமாறி  எதையும் விற்கவும் வாங்கவும் தயாரானவர்கள் கையில்  போய்விட்டது ! கொஞ்சம் கண் திறந்து பார் ! எப்படிப்பட்டவர்கள் ஆட்சி செய்தார்கள் இப்போது என்ன நடக்கின்றது என்று பார் ! .