தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு எல்லாவிதத்திலும் தோல்வி அடைந்து விட்டது. சட்ட ஒழுங்கு மின்வெட்டு மணல் கொள்ளை விவகாரம் சுற்றுச் சூழல் விவசாயிகளுக்கு ஆதரவு என்ற எல்லா பிரச்சனைகளும் தமிழக அரசின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கின்றன. எல்லாப் பிரச்சனைகளையும் இலவசங்களின் மூலமும் பணத்தின் மூலமும் மறைத்திட வரும் தேர்தலில் அதிமுக முயலலாம். திராவிடம் என்ற பெயரில் தமிழர்களிடத்திலிருந்து ஆட்சியை கைப்பற்றி வைத்திருக்கும் அதிமுக தலைமைக்கும் அதற்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்ட இன தலைவர்களையும் பார்க்கின்றோம். மேசை தட்டுவதில் தான் இவர்கள் பாண்டியத்தியம் அடைந்து இருக்கின்றார்கள். அதிமுக அமைச்சர்கள் எம் எல் ஏ க்கள் எம்பிக்கள் பதவிக்காலம் முடிந்தால் கூனர்களாகி விடுவார்கள் என்று நான் நினைக்கின்றேன். பதவிக்காக கொடுக்கும் சிறிய விலைஅவர்களின் தன்மானம். இவர்களைப் பார்த்து ஊர் மட்டுமல்ல அவர்களின் நிழலே சிரிக்கும். தன்மானத்தினை விற்று பதவி வாங்குகின்ற நண்பர்களே ஒர் சுமை தூக்கும் தொழிலாளி கூட தனது தன்மானத்தினை விட்டுக் கொடுப்பதில்லை. நான் அந்த சுமை தூக்கும் தொழிலாளியிடம் தன்னம்பிக்கையாக வாழ்வது பற்றி அறிந்து கொண்டேன். நீங்கள் உங்கள் தன்மானத்தினை விற்று வாங்கிய மானங் கெட்ட பதவியின் மூலம் என்ன அறிந்து கொண்டீர்கள் . மக்களுக்கு என்ன செய்தீர்கள் எனக்கு சொல்லுங்கள். அமைதி வளம் வளர்ச்சி யாருக்கு ? பவுலை கொள்ளையடி பீட்டருக்கு கொடு என்ற ஆங்கிலப் பழமொழியைச் சொல்லி ஒட்டுக்களை விலைக்கு வாங்கும் அவலம் பற்றி ஒரு நண்பர் வருந்தினார். எனக்கு அப்போது என்ன தோன்றியது தெரியுமா குப்புசாமியை கொள்ளையடி குப்புசாமிக்கு கொஞ்சம் கொடு மீண்டும் குப்புசாமியை கொள்ளையடி என்ற எண்ணம் தான். தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் அதிமுகவின் அரசியல் சதிகளை வெறுக்கின்றனர். அவர்களுக்கு நல்ல சாலை குடிநீர் ஊழலில்லாத நிர்வாகம் வேண்டும். கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கு பால் விலை ஏற வேண்டும். விவசாயப் பொருட்களின் கொள்முதல் விலை ஏற வேண்டும். ஆனால் நீங்கள் என்ன செய்கின்றீர்கள் அறியாமையில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களின் ஒட்டுக்களை வறுமையில் வாழும் மக்களின் ஒட்டுக்களை விலைக்கு வாங்குகின்றீர் சுமார் 12 வருடங்களாக ஜெயலலிதா ஆண்டு வருகின்றார். தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றது.1977 ல் இருந்து அதிமுக பல தடவை தமிழகத்தினை ஆண்டு கொண்டிருக்கின்றது. எனக்குத் தெரிந்த பல அரசியல்வாதிகள் பணக்காரர்களாக ஆகிவிட்டார்கள். பெரும் பணக்காரர்களாக. பல இடங்களில் இடம் வாங்கி போடுகின்றார்கள். கம்பெனி அதிபர்கள் ஆகின்றார்களஆடம்பரக் கார்களில் பவனி வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் கருணாநிதியின் குடும்பம் நன்மையடைவதாக சொல்கின்றார்கள். பத்திரிக்கை திரையுலகம் எல்லாவற்றினையும் திமுக தலைவரின் குடும்பத்தினர் ஆக்கிரமிக்க முயல்கின்றார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்தால் அதே பழைய பேர்வழிகள் மேலும் மேலும் பணக்காரர் ஆகின்றார்கள். இன்னோவா கார் என்ன ஸ்கார்பியோ என்ன. உள்ளாட்சியிலிருந்து தமிழ்நாடு மாநில அரசு ஏன் மத்திய திட்டங்களைக்கூட விட்டு வைப்பதில்லை. உள்ளூரிலே நூறுநாள் திட்ட பயனாளிகளின் கூலியில் பத்து இருபது திருடுகின்றனர். திருடுவதை விடுங்கள் திறமையாக ஏதாவது திட்டம் தான் தீட்டினீர்களா? ஒன்றினைச் சொல்லுங்களேன் உங்கள் அறிவினைப் பார்த்து தமிழகம் வியந்த ஒன்றினை . இந்திய நதிகள் இணைப்பு பற்றி பொதுக்கூட்டங்களில் பேசும் ஜெயலலிதா எத்தனை நீர்ப்பாசன திட்டங்களைச் செய்திருக்கின்றார். மிகச் சாதரண அவிநாசி அத்திக்கடவு நீர்ச்செறிவூட்டும் திட்டம் போன்ற சாதரண திட்டங்களைக் கூட இரண்டு திராவிட அரசுகளும் ஓரக்கண்ணால் கூடப் பார்க்கவில்லை. திராவிடம் என்று சொல்லிக் கொண்டு மலையாள கர்நாடக ஆந்திரா அரசுகளுடன் மல்லுக்கட்டும் இவர்கள் உள்ளூரில் முதல் மடை கடைமடை விவசாயிகள் மல்லுக்கட்டுவதை தடுக்க முடியவில்லை. பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இன்னும் இருபதாண்டுகளாக பணம் வரவில்லை. நல்ல சாலை பாலம் தண்ணீர் மின்சாரம் நீங்கள் பெருமூச்சுத்தான் விடவேண்டும். சாராயக் கடைகளை அதிகரிப்பது என்றால் இரண்டு கழகங்களும் போட்டி போடுகின்றன. படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று சொன்ன ஜெயலலிதா இன்னும் முதல் படிகூட ஏறவில்லை. பழனிமலை மாதிரி சாராய மலை என்பதையும் ஜெயலலிதா தேடிக் கொண்டிருப்பார் போலிருக்கின்றது பின்னர் அதில் முதல் படி ஏறுவார்? அதற்குள் சாரய வெள்ளத்தில் சிக்கி தமிழர்கள் மூச்சுத்திணறி சாகப்போகின்றார்கள் ! சாராயவிற்பனை குறைந்தால் தமிழக அரசு கவலையடைகின்றது. மிக நீண்ட காலத்திற்கு அப்புறம் தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலைகள். அரசாங்கம் சிறிய அக்கறை கூட செலுத்தியதாகத் தெரியவில்லை. விவசாயகளின் தற்கொலை பற்றி அமைச்சரவைக் கூட்டம் நடந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? மின்வெட்டு பிரச்சனை சிறு தொழிலதிபர்களை வாட்டி வதைக்கின்றது . முந்தைய அரசு மத்திய அரசு பாகிஸ்தான் அரசு இலங்கை அரசு இராஜராஜ சோழன் அரசு எல்லாவற்றினையும் குறை சொல்லுவதைத் தவிர்த்து மின் உற்பத்திக்கு ஒரு சிறு செங்கல்லை கூட இந்த தமிழக அரசு இந்த இரண்டு வருடத்தில் நகர்த்தியதாகத் தெரியவில்லை. கொத்திப்போடப்பட்டிருக்கும் சாக்கடைகள் நிரம்பிய தமிழகச் சாலைகளின் வழியே செல்லும் போது தமிழகத்தின் இருண்ட எதிர்காலத்தினை நினைத்து பார்க்கின்றோம். பாஞ்சாலி சூதாட்டத்தில் தான் அடகு வைக்கப்பட்டாள் . தமிழன் ரூ500/- கிடைத்தால் தனது மனைவியை மக்களை நாட்டை கட்டிய கோவணத்தை அடகு வைத்து விடுவான். அடத் தமிழா திராவிடம் என்ற பெயரில் ஆட்சி திறமையானவர்களிடமிருந்து கைமாறி எதையும் விற்கவும் வாங்கவும் தயாரானவர்கள் கையில் போய்விட்டது ! கொஞ்சம் கண் திறந்து பார் ! எப்படிப்பட்டவர்கள் ஆட்சி செய்தார்கள் இப்போது என்ன நடக்கின்றது என்று பார் ! .
No comments:
Post a Comment