Saturday, November 28, 2015

அரசியல் சாசனம் ஒரு அறிமுகம் 

                     இன்றைக்கு நிறையப் பேர் பயன்படுத்தும் ஒரு வாசகம் இது. அரசின் நடவடிக்கை  அரசியல் சாசனத்திற்கு முரணானது என்ற வாக்கியம். அது என்ன அரசியல் சாசனம்?. மன்னர்கள் ஆட்சி நிறைவுக்கு வந்து இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியா நிறுவனத்தின் ஆட்சி முடிவுக்கு வந்து,  இங்கிலாந்து மகாராணி இந்தியாவை ஆளும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு சில காலம் கழித்து இந்தியாவை இந்தியர்களே ஆண்டுகொள்ள வேண்டும் என்ற விருப்பம் இந்தியர்களுக்கு உருவானது. மேலை நாடுகளில் கல்வி பயின்ற இந்தியர்கள் மேலை நாடுகளில் பரவி இருந்த ஜனநாயக முறைகளால் கவரப்பட்டார்கள். இந்தியாவிலும் மக்களே தங்களை ஆண்டு கொள்ளும் சுயாட்சி வேண்டும் என்ற சிந்தனை அவர்கள் மனதிலே தோன்றியது. அதற்கு முன்பாக இந்தியர்களுக்கு வெள்ளையர் அரசாங்கத்தில் அதிக உரிமைகளைப் பெற காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டிருந்தது. 
                 காங்கிரஸ் கட்சியின் நோக்கங்கள் படிப்படியாக  அதிகாரத்தில் பங்கு என்று ஆரம்பித்து முழுவிடுதலைப் போராட்டமாக வளர்ச்சியடைந்தது. இந்த  விடுதலைப் போராட்டத்தின் வழிகாட்டியாக காந்தி இருந்தார். அஹிம்சா வழியில் ஒரு ஜனநாயக நாடு உருவாவதற்கான கனவு அவரிடம் இருந்தது. அந்தக் கனவின் அடிப்படையில் நமக்கு எப்படிப்பட்ட அரசாங்கம் வேண்டும் என்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் தீர்மானிக்கக் கூடிய இடம் தான் அரசியல் சாசன சபை. மன்னர் ஆட்சியில் மன்னரே எல்லா அதிகாரங்களையும் செலுத்துகின்றார். எழுதப்பட்ட சட்டங்கள் எதுவும் அவருக்கு தேவையில்லை. அவரே நிர்வாகி. வரி வசூல் செய்து ஆட்சி பரிபாலனம் செய்வார். அவரே நீதிபதி. தேர்தல்கள் எதுவும் தேவையில்லை. ஆனால் மக்களாட்சி வேண்டும் என்று முடிவு செய்த ஒரு நாடு ஆட்சி முறை எப்படி இருக்கவேண்டும். அதிகாரங்கள் யாரிடத்தில் இருக்க வேண்டும், மக்களுக்கு என்ன உரிமைகள் என்ற தீர்மானித்து பிரகடனம் செய்தது தான் அரசியல் சாசனம்.
               இந்திய அரசியலமைப்பு ஒரு சட்டம் அல்ல. அது ஒரு பிரகடனம்.  அது என்ன ஆட்சி முறை இருக்க வேண்டும் , மக்களின் உரிமைகள் என்ன, என்பதைப் பற்றிய ஒரு பிரகடனம். இந்தியர்களாகிய நாம் இந்தியாவை ஒரு  ஆளுமையுள்ள, சமதர்ம,  மதசார்பற்ற, மக்களாட்சி குடியரசு முறை ஜனநாயக நாடாக உருவாக்க உறுதி பூண்டு இந்த அரசியல் சாசனத்தினை உருவாக்கி நமக்கு நாமே வழங்கிக் கொள்கின்றோம் என்று அரசியல் சாசனத்தின் முகப்புரை கூறுகின்றது.
              இந்திய அரசியல் சாசனத்தில் என்ன தான் இருக்கின்றது. அரசியல் சாசனத்தின் பெரும்பிரிவுகள் இவை தான். 
                         I.இந்தியாவின் பகுதிகள்
                         II.யார் இந்தியக் குடிமகன்
                         III.மக்களின் அடிப்படை உரிமைகள்
                         IV. அரசுகளை வழிநடத்த வேண்டிய கொள்கைகள்
                         V. மத்திய அரசு 
                         VI. மாநில அரசுகள்
                         VII.பார்ட் பி மாநிலங்கள்
                         VIII.மத்திய ஆட்சிப் பகுதிகள் 
                         IX.உள்ளாட்சி
                          X.பழங்குடியின மலைவாழ் மக்கள் பகுதிகள் 
                          XI.மத்திய மாநில அரசுகளுக்கிடையே உறவு, அதிகாரப் பங்கீடு 
                         XII.மத்திய மாநில அரசுகளின் சொத்துக்கள், ஒப்பந்தங்கள், வழக்குகள்
                         XIII.இந்தியாவின் உள்நாட்டு வணிகம், வியாபாரம்
                         XIV.மத்திய மாநில அரசுகளின் அரசுப் பணிகள்
                         XV.மத்திய அரசு மாநில அரசின் தேர்தல்கள்
                         XVI.தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகளுக்கான சில சிறப்பு உரிமைகள்
                         XVII.மத்திய மாநில அரசுகளின் அலுவல் மொழி
                         XVIII.நெருக்கடி காலத்திற்கான வழிவகைகள் 
                         XIX.இதர விவகாரங்கள்
                         XX.அரசியல் சாசனத் திருத்தம் 
                         XXI.தற்காலிக மற்றும் சிறப்பு , மாறும் நிலைக்கான வழிவகைகள்,
                         XXII. குறுந்தலைப்பு, தொடக்கம் மற்றும் இந்தியில் அதிகாரப் பூர்வ மொழிபெயர்ப்பு . 
                   என்று 22 அத்தியாயங்களுடனும் கூடுதலாக 12 அட்டவணைகளுடனும் இந்திய அரசியல் சாசனம் எழுதப்பட்டுள்ளது.  22 அத்யாயங்களும் 395 பிரிவுகளும் கொண்டிருக்கின்றது இந்திய அரசியல் சாசனம். ஏதாவது பிரிவுகளில் மிக அதிகத் தகவல்கள் இருந்தால் தனியாக பிரிக்கப்பட்டு அட்டவணையில் விரிவாக சொல்லப்படுகின்றன. அரசியல் சாசனத்தின் ஒவ்வொரு அத்யாயமும் என்ன சொல்கின்றது என்பது பற்றிச் மிகச் சுருக்கமான விபரங்கள் கீழே. 
  I.இந்தியாவின் பகுதிகள் 
                   அரசியல் சாசனத்தின் முகப்புரைக்கு பின்னர் முதலில் இந்தியாவின் எல்லைகள் பற்றிப் பேசப்படுகின்றது. 1முதல் 4 வரையிலான பிரிவுகள் இந்தியாவின் பகுதிகள் எவை என்பது பற்றியும், மாநிலங்களை உருவாக்கவும், மறுவரையறை செய்யவும் பாராளுமன்றத்தின் அதிகாரம் பற்றியும் பேசுகின்றது. மாநிலங்கள் பற்றிய விபரம் அட்டவனை 1 ஆக இணைக்கப்பட்டுள்ளது. 
 II.இந்தியாவின் குடியுரிமை
                  5 முதல் 11 வரையிலான பிரிவுகள் இந்தியாவின் குடியுரிமை யாருக்கு என்பது பற்றிப் பேசுகின்றது. 
III.மக்களின் அடிப்படை உரிமைகள் 
                  13 முதல் 35 வரையிலான பிரிவுகள் தான் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றிப் பேசுகின்றன. இவை தான் அரசியல் அரங்கிலும் மக்கள்: மன்றத்திலும் அதிகம் விவாதிக்கப்படுகின்றன. அரசியல் சாசனம் சம உரிமை, கருத்துச் சுதந்திரம், உயிர்வாழ்விற்கான உரிமை, விரும்பும் மதத்தினை பின்பற்றும் உரிமை, சிறுபான்மை மதம் மொழி கல்வி கற்பிக்கும் உரிமையை பாதுகாத்தல் என்று மக்களின் பல உரிமைகளை இங்கே பிரகடனம் செய்கின்றது. இந்த அடிப்படை உரிமைகளுக்கு விரோதமாக எந்தச் சட்டங்களையும் மத்திய மாநில சட்ட மன்றங்கள் இயற்ற முடியாது. அப்படி உருவாக்கப்படும் சட்டங்களை அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று இரத்து செய்யும் உரிமை இந்திய உயர்நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதி மன்றங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றது.இங்கு தான் சட்ட மியற்றும் அமைப்புகளான பாராளுமன்றம் மற்றும் மாநில சட்ட மன்றங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் கருத்து மோதல்கள் ஏற்படுகின்றது. பாராளுமன்றம் இயற்றும் ஒரு சட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று கருதினால் நீதிமன்றங்கள் இரத்து செய்யலாம். உதாரணத்திற்கு இட ஒதுக்கீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அரசியல் சாசனம் அனைவருக்கும் சம வாய்ப்பிற்கு உறுதி அளிக்கின்றது. மத்திய அரசு குறிப்பிட்ட இனத்திற்கு இட ஒதுக்கீடு கொடுக்கும் சட்டத்தினைக் கொண்டு வருகின்றது. உடனே அதனை அரசியல் அமைப்புச் சட்டத்தின் சமவாய்ப்புக் கொள்கையின் அடிப்படையில் அது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்ற முடிவிற்கு நீதி மன்றம் வருகின்றது. பாராளுமன்றம் உடனே அரசியல் சாசனத்தினை திருத்தி பின் தங்கிய மக்களுக்கு ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்கின்றது. இத்தகைய திருத்தங்களை பாராளுமன்றம் அரசியல் சாசனத்தில் செய்யலாமா என்றும் பிரச்சனைகள் ஏற்பட்டது. உச்ச நீதிமன்றம் அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களை மாற்றாத வகையில் திருத்தங்கள் செய்யலாம் என்று சொல்கின்றது. 
IV.அரசுகள் பின்பற்ற வேண்டிய கொள்கைகள்
                  அடிப்படை உரிமைகளை அரசு மறுக்க முடியாது. நெருக்கடி நிலைக் காலத்தில் தற்காலிக நிறுத்தம் வேண்டுமானால் செய்யப்படலாம். ஆனால் அரசு பின்பற்ற வேண்டிய கொள்கைகள் அப்படியல்ல. அரசின் நிதி நிலை போன்ற பல விவகாரங்களைப் பொறுத்து அரசு இந்தக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி,  மதுவிலக்கு, பல காந்தியக் கருத்துக்கள் போன்ற பல விசயங்கள் இதில் சொல்லப்படுகின்றன. 
V.மத்திய அரசு.
             இது மத்திய அரசின் அமைப்பு பற்றிக் கூறுகின்றது. பெயரளவு தலைவராக குடியரசுத் தலைவர் என்ற பதவி உருவாக்கப்படுகின்றது. அரசியல் சாசனப் படி மக்களவையில்  பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் பிரதமாராக இருப்பார் என்றும், ;பிரதம மந்திரி தலைமையிலான மந்திரிசபையின் ஆலோசனைப் படி குடியரசுத் தலைவர் ஆட்சி செய்ய வேண்டும் என்றும் அரசியல் சாசனம் கூறுகின்றது. பிரிட்டிஷ் நாடாளுமன்ற மரபுகளை ஒட்டி  இந்த இந்திய நாடாளுமன்ற நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அத்தியாயத்தில் குடியரசுத்தலைவர் துணைத் தலைவர் பாரளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது போன்ற நடைமுறைகள் விளக்கப்படுகின்றன. இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் இந்திய கணக்குத் தணிக்கையாளர் ஆகிய அமைப்புகளைப் பற்றியும் நீதிபதிகள், கணக்குத் தணிக்கையாளர் போன்றவர்களை நியமனம் செய்தல், உயர் நீதி மன்றத்திலிருந்து செய்யக்கூடிய சில அப்பீல்கள் பற்றியும் பேசப்படுகின்றது. 
VI.மாநில அரசுகள் 
            6 வது அத்யாயமாக வருவது மாநில அரசுகளின் நிர்வாக அமைப்பு. மாநில அரசின் தலைவராக கவர்னர் இருப்பார். மாநில அரசின் அனைத்து நடவடிக்கைகளும் கவர்னர் பெயராலேயே மேற்கொள்ளப்படுகின்றன. கவர்னருக்கு ஆலோசனை சொல்ல சட்ட மன்ற பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற நபர் முதல்வராக இருப்பார். கவர்னர் மந்திரிசபையின் ஆலோசனைப் படி செயல்பட வேண்டும் என்பதெல்லாம் இந்த அத்தியாயத்தின் பிரிவுகளில் விளக்கப்படுகின்றது. 
VII.பார்ட் பி மாநிலங்கள்
          இந்த அத்யாயத்தில் சுதேச சமஸ்தானங்களாக இருந்து இந்தியாவுடன் இணைந்த பகுதிகள் பற்றிப் பேசப்படுகின்றது. 1956 மாநில மறுசீரமைப்புச் சட்டத்தினால் இந்த சுதேச சமஸ்தானங்கள் சீரமைக்கப்பட்டு பல மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு விட்டது. எனவே இந்தப் பகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டது. 
VIII.மத்திய ஆட்சிப்பகுதிகள் 
            இது பாண்டிச்சேரி போன்ற மத்திய நேரடி ஆட்சிப் பகுதிகள் பற்றியது. பாண்டிச்சேரி அரசியலைப்புச் சாசனம் அமலுக்கு வந்த பின்னர் தான் இணைந்தது. ஆனால்தலைநகர்ப் பிரதேசமான தில்லி முதலிய பகுதிகள் மத்திய அரசின் நேரடி ஆட்சியின் வசம் வைக்கப்பட்டது. இந்தப் பகுதிகளின் நிர்வாகம் பற்றி மத்திய ஆட்சிப் பகுதிகள் பற்றிய அத்யாயம் தெரிவிக்கின்றது. 
IX.உள்ளாட்சிகள்
          உள்ளாட்சிகளுக்கு  சரியான மதிப்பு கிடைத்தது இராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது தான். உள்ளாட்சித் தேர்தல்கள் கட்டாயமாக்கப்பட்டு அவைகளுக்கு என்று சில துறைகளும் ஒதுக்கப்பட்டது. அரசியல் சாசனத்தின் 11 வது 12 வது அட்டவனைகள் கிராம, நகராட்சி அமைப்புகள் கவனிக்க வேண்டிய விவகாரம் பற்றிப் பேசுகின்றது. கிராம சுயராஜ்யம் பற்றிய காந்தி கனவின் ஒரு பகுதி நனவாகியிருக்கின்றது என்று சொல்லலாம். 
X.பழங்குடியின மலைவாழ் மக்கள் பகுதிகள் 
                 நாட்டின் பலபகுதிகளில் வாழும் பழங்குடிப் பகுதிகளின் நிர்வாகம் பற்றி இந்தப் பகுதி பேசுகின்றது. அரசியல் சாசனத்தின் 5 மற்றும் 6 வது அட்டவணைகளில் இது விரிவாகப் பேசப்படுகின்றது.
XI.மத்திய மாநில அரசுகளுக்கிடையே அதிகாரப் பங்கீடு 
                 இந்த அத்யாயத்தில் மத்திய அரசு எந்தச் சங்கதிகள் பற்றிச் சட்டம் இயற்றலாம் மாநில அரசுகள் எந்தச் சங்கதிகள் பற்றிச் சட்டம் இயற்றலாம். பொதுப் பட்டியலில் வைக்கப்படுபவை எவை என்பது பற்றி கூறப்பட்டுள்ளது. இராணுவம், இராணுவக் குடியிருப்புகள், வெளியுறவு, இரயில்வே போன்ற பல விசயங்களில் மத்திய அரசு மட்டுமே சட்டம் இயற்ற முடியும். இது போன்ற 97 சங்கதிகள் மத்திய அரசின் வரம்பிற்கு உட்பட்டவை. சட்ட ஒழுங்கு, காவல்துறை, தண்ணீர், விவசாயம் போன்ற 66 விசயங்களில் மாநிலங்கள் மட்டுமே சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றவை. இது தவிர குற்றவியல் சட்டம், விலைவாசிக் கட்டுப்பாடு, மின்சாரம், தொழிற்சாலைகள், காடுகள் போன்ற 47 சங்கதிகளில் மத்திய மாநில அரசுகள் கூட்டாக சட்டமியற்றும் அதிகாரம் பெற்றுள்ளன. இந்தப் பொதுப்பட்டியலில் மத்திய அரசின் சட்டங்களுக்கு விரோதமாக மாநில அரசுகள் சட்டமியற்றினால் அவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின்னால் அமலுக்கு வரும். 
XIIமத்திய மாநில அரசுகளின் சொத்துக்கள், ஒப்பந்தங்கள், வழக்குகள்:
          இந்த அத்யாயத்தில் மத்திய மாநில அரசின் சொத்துக்கள் பற்றி ஒப்பந்தங்கள், வழக்குகள் யார் பெயரால் செய்யப்படவேண்டும் என்பது பற்றி கூறுகின்றது. 
XIIIஇந்தியாவின் உள்நாட்டு வணிகம், வியாபாரம் 
           இந்தியாவில் மாநிலங்களுக்கிடையில் நடைபெறும் வணிகத்தினைப் பற்றி இந்தப் பகுதியில் பேசப்படுகின்றது.மாநிலங்களுக்கு இடையே ஆன வணிகத்தினை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. மற்ற மாநில பொருட்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு தரப்பட்டுள்ளது. 
XIVமத்திய மாநில அரசுகளின் அரசுப் பணிகள்
           இந்தப் பகுதியில் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் மற்றும்  மாநில பணியாளர் தேர்வாணையங்கள் பற்றிக் கூறப்படுகின்றது. 
                    
XV. மத்திய அரசு மாநில அரசின் தேர்தல்கள்              
          இந்தியத்தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. குடியரசுத்தலைவர் துணைத் தலைவர் தேர்தல்கள் நாடாளுமன்றத்  தேர்தல்கள்,  மாநில சட்ட மன்றத் தேர்தல்கள் ஆகியவை இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகின்றன. சில பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் தேர்தல் ஆணையம் செம்மையாகவே தன் பணியைச் செய்து வருகின்றது என்று கூற வேண்டும்.  
XVI.தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகளுக்கான சில சிறப்பு உரிமைகள்
              தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு  பாரளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் ஒதுக்கீடு, ஆங்கிலோ இந்தியர்களுக்கான ஒதுக்கீடு பிற்படுத்தபட்ட சாதியினருக்கான ஆணையம் போன்ற விசயங்கள் இந்தப் பாகத்தில் விவரிக்கப்படுகின்றது. 
XVII.மத்திய மாநில அரசுகளின் அலுவல் மொழி
             மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தியும் ஆங்கிலமும் இருக்க வழிவகை செய்கின்றது. 1963 க்கு பின்னர் இந்தி மட்டுமே அலுவல் மொழி என்று அரசியல் சாசனம் சொன்னாலும் நேரு இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக நீடிக்கும் என்று கொடுத்த வாக்குறுதி இன்று வரை கடைபிடிக்கப்படுகின்றது. இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக 22 இருக்கின்றன. 
XVIII.நெருக்கடி காலத்திற்கான வழிவகைகள் 
               இந்தியாவின் பாதுகாப்பிற்கு வெளிநாட்டு காரணிகளாலோ உள்நாட்டுக் குழப்பத்தாலோ ஆபத்து நேரும் போது குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்யலாம். நெருக்கடி நிலை காலத்தில் அடிப்படை உரிமைகள் இரத்து செய்யப்படுகின்றது. மாநில அரசுகளுக்கு எந்த விசயம் பற்றியும் மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கலாம். மாநில அளவில் மத்திய அரசின் நேரடியாட்சிக்கும் வகை செய்யப்பட்டுள்ளது. அரசியல் சாசனம் செயலிழந்து விடும் மாநிலங்களில் மாநில ஆட்சி கலைக்கப்படலாம். கவர்னர் ஆட்சி பிரகடனம் செய்யப்படலாம். 
XIX.இதரவிவகாரங்கள்
            இந்தப் பகுதியில் குடியரசுத் தலைவர் கவர்னர் ஆகியோருக்கு பதவிக்காலத்தில் வழக்குகளிலிருந்து பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. இன்னும் சில சொல்லப்படாத விசயங்கள் பற்றிப் பேசுகின்றது. 
XXஅரசியல் சாசனத் திருத்தம்
            இந்தப் பகுதியில் இந்திய அரசியல் சாசனம் எப்படித் திருத்தப்படலாம் என்று கூறுகின்றது. மாநில உரிமைகளை பாதிக்கும் விவகாரங்களில் பாதி மாநில சட்ட மன்றங்கள் அரசியல் சாசனத் திருத்தத்திற்கு ஆதரவு தர வேண்டும். மற்ற விவகாரங்களில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தால் போதும்.
XXI, XXII .தற்காலிக மற்றும் சிறப்பு மாறும் நிலைக்கான வழிவகைகள்
              அரசியல் சாசனம் அமலுக்கு வரும் காலகட்டத்தில் இடைக்கால ஏற்பாடுகளைப் பற்றி இந்தப் பிரிவுகள் பேசுகின்றன. கடைசிப்பகுதி இந்தியின் அதிகாரப் பூர்வ மொழிபெயர்ப்பு பற்றிப் பேசுகின்றது. 
           இது தான் இந்திய அரசியல் சாசனம். இந்திய அரசியல் நிர்ணய சபை 1946 ல் இந்திய அரசியல் சாசனம் எழுதும் தனது வேலையைத் தொடங்கியது. டாக்டர் இராஜேந்திர பிரசாத் தலைமையில் இயங்கிய இந்த அவை 1949 நவம்பரில் வரைவு இந்திய அரசியல் சாசனத்தினை அங்கீகரித்தது. இந்திய அரசியல் சாசன வரைவுக் குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கார் இருந்தார். இந்த வரைவுக்குழுவிற்கு நீதிமான் பெனகல் நரசிங்கம் ரா ஆலோசகராக இருந்தார். இந்திய அரசியல் சாசனம் உலகின் பல நாடுகளின் அரசியல் சாசனங்களின் கூறுகளை ஆராய்ந்து அவைகளின் சிறப்பம்சங்களை உள்வாங்கி அமைந்திருக்கின்றது. மேலும் அரசியல் சாசன சபையில் ஜவஹர் லால் நேரு கொண்டு வந்த அரசியல் சாசனத்தின் குறிக்கோள் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் இந்த அரசியல் சாசனம் அமைந்துள்ளது. அரசியல் சாசனம் 1950 ல் ஜனவரி 26 முதல் அமலுக்கு வந்தது.எனவே ஒவ்வொர் ஆண்டும் ஜனவரி 26 குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்திய  அரசியல்சாசனம் அமலுக்கு வந்த பின்னர் நூற்றுக்கணக்கான திருத்தங்களைக்  கண்டு விட்டது.( பொது பண்ட மற்றும் சேவை வரி சட்ட முன்வரைவு 122திருத்தமாக காத்துக் கொண்டிருக்கின்றது) ஆனால் இந்திய ஜனநாயகம் நிலைத்திருக்கின்றது. சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்கள் கனவு கண்ட ஒரு உண்மையான மக்களாட்சியை நாம் இன்னமும் அடையாமல் இருக்கலாம். ஆனால் குறைபாடு உள்ளதாக இருந்தாலும் ஏராளமான போராட்டங்களுக்கு பின்னர் இந்திய ஜனநாயகம் நிமிர்ந்து நடை போடுகின்றது என்ற உண்மையை மறுக்க முடியாது. 

No comments:

Post a Comment