அது என்ன ஐ எஸ் ஐ எஸ்
ISIS - இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் லெவண்ட். ஒரு நடுங்க வைக்கும் நாடு உருவாகி வருகின்றதா என்ற அச்சம் உலகெங்கும் ஏற்பட்டுள்ளது. போரினால் சிதைவடைந்து போன ஈராக்கும் உள்நாட்டுப் போர்கள் நடந்து கொண்டிருக்கும் சிரியாவும் மதவெறி கொண்ட தீவிரவாதிகளின் விளைநிலங்களாக மாறி வருகின்றன. ஈராக்கில் ஒரு அரசாங்கம் இல்லாமல் இருப்பதும் சிரியா அரசாங்கம் எதிர்க்கட்சிகளுடன் நடத்திக் கொண்டிருக்கும் போர்களும் மதத் தீவிரவாத இயக்கம் ஒன்று ஒரு அரசாங்கத்தினை ஏற்படுத்தும் அளவிற்கு சூழ்நிலைகளை உண்டாக்கியுள்ளது.
அரேபியா வகாபி அல்லது சலாபி தீவிர முஸ்லிம் மதக் கோட்பாட்டு பிரிவின் கொள்கைகளின் அடிப்படையில் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்பு அமைந்துள்ளது. வகாபி முஸ்லிம் பிரிவு பழைமை வாத முஸ்லிம் கோட்பாட்டினைப் பின்பற்றுபவர்கள். அந்த அடிப்படையில் முஸ்லிம் காலிபா அரசாங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளதாக ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு கூறுகின்றது. Abu Bakr al-Baghdadi அபு பக்கர் அல் பாக்தாதி யை இந்த அமைப்பு அமைத்துள்ள அரசாங்கத்தின் காலிபா என்றும் இந்த அமைப்பு அறிவித்துள்ளது.
அடிமை முறையை ஆதரிக்கும் இந்த அமைப்பு தன்னுடைய நாட்டிற்கு இஸ்லாமிக் ஸ்டேட் என்று பெயரிட்டுள்ளது. குரான் ஒன்றே முதன்மையானது என்று கூறும் இந்த அமைப்பு குரானின் சட்டங்களை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கவும் செய்கின்றது. உலகின் எந்த முஸ்லிம் அமைப்புகளும் இந்த அமைப்பின் சித்தாங்களை ஆதரிக்கவில்லை. குரான் பற்றி இந்த அமைப்பு கூறும் விளக்கங்களை ஏற்கவும் இல்லை.
குழுவாகப் படுகொலை செய்தல், முஸ்லிம் அல்லாத இனக்குழுப் பெண்களை கற்பழித்தல், அவர்களை அடிமையாகப் பிடித்து வைத்தல் , விற்பனை செய்தல் என மனித சமுதாயம் வெறுக்கும் அனைத்து ஈனச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர் இந்த அமைப்பினர். கற்பழிப்பு புனிதப் போரின் ஒரு பகுதி என்று இந்தத் தீவிரவாதக் குழு கருதுகின்றது. உலகெங்கிருந்தும் காலிபா அரசாங்கம் ஒன்றினை உருவாக்க விரும்பும், தீவிரவாதச் சிந்தனை கொண்ட இளைஞர்கள் இப்போது ஐ எஸ் ஐ எஸ் ஆல் ஈர்க்கப்படுகின்றனர்.
உலகின் அனைத்து இஸ்லாமிய அரசுகளும் காலிபாவிற்கு கட்டுப்பட்டவை. காலிபாவின் எல்லைகள் விரிவாகும் போது இஸ்லாமிய அமீரகங்கள், நாடுகள், குழுக்கள் அனைத்தும் துடைத்தெறியப்படும் என்று இந்த அமைப்பு கூறுகின்றது. ஐ எஸ் ஐ எஸ் சின் எல்லைகள் ஈராக்கையும் சிரியாவையும் தாண்டி நீளுகின்றன. பல மதப் பயங்கரவாத அமைப்புகள் தற்போது இந்த அமைப்பினை ஏற்றுக் கொள்கின்றன.
இந்த அமைப்பின் பிண்ணனியில் அமெரிக்கா இருப்பதாக பலர் சந்தேகப்படுகின்றனர். மத்தியக் கிழக்கில் அமைதியின்மையை ஏற்படுத்த அமெரிக்கா இந்த அமைப்பினைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். துருக்கியின் ஆதரவு இந்த அமைப்பிற்கு இருப்பதாகக் கூறப்படுகின்றது. சவுதி அரேபியா அரசு மறுத்த போதிலும் சவுதி அரேபியா அரசின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த அமைப்பினை எதிர்க்க அமெரிக்கா ஒரு கூட்டமைப்பினை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சிரியாவிற்கு ஆதரவாக களமிறங்கியுள்ள இரஷ்யா ஐ எஸ் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. சிரியாவின் தற்போதைய ஆசாத் அரசிற்கு மேற்கு நாடுகள் எதிராக இருக்கின்றன. இது மத்திய கிழக்கில் குழப்பமான, பயங்கரமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீவிரவாத அமைப்பில் இந்தோனிசியாவிலிருந்து சுமார் 50 பேரும் இந்தியாவிலிருந்து சுமார் 18 பேரும் இருக்கலாம் என்று சில மதிப்பீடுகள் கூறுகின்றன. இந்தோனிசியா முஸ்லிம் மக்கள் தொகையில் உலகத்தில் முதலிடத்தில் இருக்கின்றது. இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. இந்த இரண்டு குடியரசு நாடுகளின் முஸ்லிம்கள் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதத்தினை நிராகரித்துவிட்டனர் என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். ஜனநாயகம் என்கின்ற வார்த்தையை வெறுத்து காலிபா என்கின்ற பழைமை வாத அரசாங்கம் ஒன்றினை உருவாக்கும் தீவிரவாத எண்ணங்களுக்கு முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை.
சதாம் ஹூசேனின் அரசாங்கத்தினை ஒழித்துக் கட்ட மிகக் குறுகிய காலமே எடுத்துக் கொண்ட அமெரிக்கா சுமார் 20000 எண்ணிக்கை கொண்ட ஒரு சிறிய படைப் பிரிவினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஆச்சர்யம் தான். எல்லா ஜனநாயக அரசாங்கங்களுக்கும் சவால் விடும் இந்தச் சிறிய குழு எப்படி போர்த்தளவாடங்களைப் பெறுகின்றது. அரசு நடத்துவதற்கான நிதி வசதியைப் பெறுகின்றது என்பதை எல்லாம் கவனிக்கும் போது மத்தியக் கிழக்கில் அமெரிக்காவின் சதுரங்க விளையாட்டின் ஒரு சிறிய சிப்பாய் தான் இந்த ஐ.எஸ் ஐ எஸ் எனத் தோன்றுகின்றது. ஆனால் ஒசாமா பின் லேடன் போல் இந்த ஐ எஸ் ஐ எஸ் அமைப்பும் அமெரிக்காவின் தலைவலி ஆகும் அபாயம் இருக்கின்றது. என்ன நடந்தாலும் தங்களது ஆயுத வியாபாரம் நன்றாக நடக்க வேண்டும் என்று நினைக்கும் அமெரிக்க ஆயுத வியாபார நிறுவனங்கள் எந்தப் போரினையும் கழுகுகள் மாதிரி எதிர்பார்த்துக் காத்துக்கிடப்பது மாற்ற முடியாத உண்மையாக இருக்கின்றது .
No comments:
Post a Comment