Thursday, September 17, 2015

               
                            காந்தி என்ற நதியும் மோடி என்ற நீர்க்குமிழியும் 

   வாழ்க்கை நதி ஒடிக்கொண்டே இருக்கின்றது. கடந்துபோனவைகளை வாழ்க்கை பொருட்படுத்துவதே இல்லை. எத்தனையோ பேரரசர்கள், மிகப் பெரிய மனிதர்கள் மறைந்து போய்விட்டார்கள். வாழ்க்கை நதியில் அவர்களும் சிறு துளிகளே. அவர்களது தலைமை அந்தந்தக் கால கட்டங்களுக்கு பொருத்தமாக இருந்திருக்கலாம். அடுத்து வரும் காலங்களில்  புதிய அமைப்புகள் அவர்களை விமர்சனம் செய்கின்றார்கள். 
             காந்தி மாமனிதராகப் போற்றப்பட்டது ஒரு காலம். இன்றைக்கு அவர் விமர்சனம் செய்யப்படுகின்றார். விமர்சனம் செய்பவர்களோ அரைகுறை அறிவு படைத்தவர்கள். அவர்களிடம் விளக்கவும் வழியில்லை. காந்தி போன்ற தலைவர்கள் அந்தச் சமுதாய நிலைமைகளைப் பிரதிபலிக்கின்றார்கள் என்று நான் கருதுகின்றேன். சுதந்திர இந்தியாவிற்கு முந்தைய காந்தி கால சமூகம் வறுமையில் வாழ்ந்திருக்கலாம். கல்வியறிவில்லாமல் இருந்திருக்கலாம். 
         ஆனால் அவர்கள் ஆன்மீகம், அன்பு, அறிவின் மீதான காதல் இவற்றினைக் கொண்டிருந்தார்கள் என்பதை காந்தியை தலைவராக  ஏற்றுக் கொண்ட சமூக நிகழ்வு பிரதிபலிக்கின்றது. தலைவர்களின் உணர்வுகளை மக்கள் ஏற்பதில்லை. சமூகத்தின் தன்மையை தலைவர்கள் பிரதிபலிக்கின்றார்கள். ஹிட்லர் அப்போதைய ஜெர்மனி யை பிரதிபலித்தார். போர்வெறியும் இனவெறியும் கொண்ட மக்கள் அதிக எண்ணிக்கையில் அங்கு இருந்திருக்க வேண்டும். 
                    மோடி இன்றைய சமூகத்தினைப் பிரதிபலிக்கின்றார் . இன்றைய இந்திய சமூகம் ஒரு பணத்தினை நேசிக்கும் சமூகமாக மாறி விட்டது. உண்மை எல்லாம் இங்கு இரண்டாம் பட்சம் தான். அதனைத் தான் மோடி பிரதிபலிக்கின்றார். அவருடைய வாக்குறுதிகள் பணம், முன்னேற்றம், சொகுசு சம்பந்தமானது. அதை இந்திய மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். காங்கிரசும் வளர்ச்சியைப் பற்றித் தான் பேசியது. ஆனால் மோடியின் நடைமுறைச் சாத்தியமில்லாத வாக்குறுதிகள் போல அல்லாமல் காங்கிரஸ் நிதானமாக பேசியது. இது வாக்காளார்களைக் கவரவில்லை. அவர்கள் காங்கிரஸ் 60 வருடங்களாக ஆண்டு ஏமாற்றி விட்டதாக நினைத்தார்கள். 
       சீக்கிரம் பலருக்கு மறந்து விடுகின்றது. பசியும் பஞ்சமும் உடுத்த ஆடைகளும் இன்றி இருந்த இந்தியா பலருக்கு மறந்து விட்டது. பசி தீர்ந்து விட்டது. பகட்டான வீடுகள் சிலருக்கு கிடைத்து விட்டது. எனவே அவர்கள் இப்போது காந்தி யார் என்று கேட்குமளவிற்கு உயிரோட்டமுடையவர்கள் ஆகி விட்டார்கள். 
                  பசி நிறைந்த பூமியில் மதம் இரண்டாம் பட்சமாக இருந்தது. பசி தீர்ந்து தொழில் வளர்ச்சியடைந்து இந்தியாவின் பிரச்சனைகள் குறைந்து வருவதால், இப்போது காங்கிரஸ் என்ன செய்தது என்ற கேள்வி வருகின்றது. மதம் வருகின்றது. வரலாறு மறந்து விடுகின்றது. ஆங்கில ஆட்சியில் 10 வருடத்திற்கு ஒரு பஞ்சம் வந்தது மறந்து விட்டது. புதியவர்கள் நேற்றுப் பிறந்தவர்களுக்கு வரலாறு தேவைப்படுவதில்லை. இன்றைய தேதிக்கு இந்தியா உலகின் உணவு தானிய உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருப்பது அவர்களின் கடைக் கண்களால் கூடக் கவனிக்கபடுவதில்லை. 
         அவர்கள் அடிமையாய் இல்லை. அவர்கள் பசியுடன் இல்லை. பிறந்தவுடன் ஏன் எங்களுக்குச் சிறகு முளைக்கவில்லை. அதற்கு காங்கிரஸ் தானே காரணம் என்கின்றார்கள். சுதந்திர இந்தியாவில் இப்போது மதம் முக்கியத்துவம் ஆகிவிட்டது. காங்கிரசார், இடதுசாரிகள் சுபாஷ் சந்திர போஸ் போன்ற மதச் சகிப்புத் தன்மை கொண்ட வலதுசாரிகள் இந்திய விடுதலைப் போராட்டத்தினை முன்னின்று நடத்தினார்கள்.       
               அந்தச் சுதந்திரப் போராட்ட வரலாற்றினை இன்றைக்கு எப்படி வேண்டுமானாலும் திரிக்கலாம் என்று மோடி நினைக்கின்றார். மக்கள் அதை ஏற்றுக் கொள்கின்றார்கள். இப்போதைய தலைமுறை உண்மைகளை பார்க்கவும் படிக்கவும் விருப்பமற்று இருக்கின்றது என்பது தான் காரணம். 
      மோடி இன்றைய வெளிப்பகட்டான இளைஞர்களைப் பிரதிபலிக்கின்றார்கள். இன்றைய இளைஞர்களுக்கு பொய் பேசுவது ஒரு சாதரண விவகாரம். இன்றைய பாணியில் ஆடை உடுத்துவது முக்கிய விவகாரம். நவீன கருவிகளைக் கையாள்வது முக்கிய விவகாரம். அதில் உண்மை பேசுவது என்பது சாதரண விவகாரம். உண்மையெல்லாம் ஒரு பிரச்சனை அல்ல. 
                தட்சீலம் பீகாரில் இருந்தால் என்ன தமிழ்நாட்டில் இருந்தால் ? முதல் இந்திய விடுதலைப் போரில் காங்கிரஸ் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ? இந்து முஸ்லீம் பிரிவினை காங்கிரஸ் தூண்டி விட்டது என்றால் கைதட்ட ஆயிரக்கணக்கில் ஆட்கள் வந்தால் பேச வேண்டியது தானே. இந்த உள்ளே சரக்கற்ற இளைஞர்கள் இருக்கும் வரை மோடி இராஜாதான் . 
                  ஆனாலும் காந்தியை விமர்சனம் செய்யும் முன் அவரைக் கொஞ்சமாவது தெரிந்து கொண்ட பேசலாம். நேதாஜியை பகத்சிங்கை  என எல்லாருமே அடிப்படையில் அப்போதைய இந்திய மக்களின் ஆன்மாவை பிரதிபலித்தார்கள்.    மோடி இன்றைய மேம்போக்கான பகட்டான போலியான சமூகத்தினைப் பிரதிபலிக்கின்றார்.       
                  இலட்சக்கணக்கான சாதரண மக்கள் காந்தி சொன்னதற்காக வீதிக்கு வந்தார்கள். துப்பாக்கி குண்டுகளைச் சந்தித்தார்கள். சிறையில் வாடினார்கள். அந்த சாதரண மக்களின் போராட்டம் மோடியின் வெற்றியால் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனியின் ஆட்சிக்கு அப்புறம் இப்போது இந்திய முதலாளிகளின் ஆட்சியின் கீழ் இந்தியா வந்திருக்கின்றது. அதற்கு மோடி ஒரு கையாள் ஆக இருந்திருக்கின்றார்.      
           காந்தியுடன் ஒப்பிடும் போது மோடி ஒரு நீர்க்குமிழி. ஆளுமைத் திறன் அற்ற ஒரு பகட்டான இளைஞர் கூட்டம் நீர்க்குமிழியை நம்பி  தேசத்தினை எந்தத் திசையில் நகர்த்திச் செல்கின்றது என்பதை  சில கவனிக்கும் கண்களுடையவர்கள் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் ! என்ன சொல்ல  !! 

No comments:

Post a Comment