தமிழ்நாட்டு அரசியலின் முக்கியமான நோக்கம் இப்போது என்னவாக இருக்கவேண்டும். தமிழ்நாட்டின் புழுதி படர்ந்த இரைச்சல் நிறைந்த மாசு நிறைந்த சாலைகளில் விரைகின்ற மனிதர்களை பார்க்கின்றபோதெல்லாம் என் மனதிலே எழுகின்ற கேள்வி இது. ஹார்ன் சத்தம் குறுக்கே விரைகின்ற பாதசாரிகள் தாறுமாறாகச் செல்கின்ற பயணிகள் இவற்றை எல்லாம் பார்க்கின்ற ஒரு மேலை நாட்டு பயணியின் பார்வையில் சட்டத்திற்கு கட்டுப்படாத மக்கள் கூட்டம் ஒன்றின் தாறுமாறான இயக்கமாக இந்திய சாலைகள் தோன்றும். ஆனால் இவர்கள் தான் மிகவும் அதிகமாக சட்டத்திற்குக் கட்டுப்படுகின்ற மனிதர்கள். எல்லா அரசு அலுவலர்களிடமும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் காட்டுகின்ற பணிவு வேறு யாரும் காட்ட முடியாது! அரசு அலுவலர் என்கின்ற லேபிள் இருந்தால் போதும். உலக நவ நாகரீகத்தில் முதன்மையான அமெரிக்காவில் 30 கோடி ஜனத் தொகைக்கு சுமார் 28 இலட்சம் பேர் சிறையில் இருக்கின்றார்கள். இது மக்கள் சட்டத்திற்கு பணிந்து நடப்பதைக் காட்டுகின்றதா? அல்லது சட்டம் சிறப்பாக அமல் செய்யப்படுவதைக் காட்டுகின்றதா? இன்னும் கொஞ்ச நாளில் அமெரிக்கத் ஜனத்தொகையின் பெரும் பகுதி சிறைக்கு சென்று விடுவார்களா? அமெரிக்கா போன்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் மக்கள் சட்டத்திற்கு மிகவும் கீழ்ப்படிந்து தான் நடக்கின்றார்கள். அப்புறம் ஏன் தமிழத்தில் நல்ல அரசாங்கங்கள் அமைய வில்லை. சிங்கப்பூர் மாதிரி ஒரு நல்ல தலைமை தமிழகத்தில் அமையவில்லை. குளிர் சாதன வசதி செய்யப்பட்ட வெளிச்சத்தம் உள்ளே கேட்காத வசதியான ஆடம்பரமான வாகனங்களில் செல்லும் தலைவர்களுக்கு பேருந்தில் செல்லுவோர், இருசக்கர வாகன ஒட்டிகள் சிரமம் தெரிய நியாயம் இல்லை.மேலும் தூசி பறக்கும் சாலைகள் பற்றி மிகச் சிலரே கவலைப்படுகின்றனர். தஞ்சைப் பெரிய கோயில் மாதிரி மாமல்லபுரம் சிற்பங்கள் மாதிரி மிகப்பெரிய கலைப்படைப்புகளை உருவாக்கிய தமிழர்களும் இப்போதைய தமிழர்களும் வேறுபட்டவர்களோ என்று நான் நினைப்பதுண்டு ஞாலம் நடுங்க வரும் கப்பல் செய்வோம் என்று பாடிய பாரதி இந்தக்கால தமிழர் தான். ஏன் அவருடைய சிந்தனையின் தாக்கம் மற்ற தமிழர்களிடையே இல்லை. சினிமாத் தமிழன் கூட பிரம்மாண்டமாய் சிந்திக்கின்றான். அரசியல் தமிழன் இன்னும் வயிற்றுக் சோறிடல் பற்றியே பேசி காலம் கடத்துகின்றான். பெரும்பாலான தமிழ் அரசியல் வாதிகள் குடிநீர் இணைப்பில் ஊழல் செய்தல், பார் நடத்துதல் கோயில்களில் வாகன நிறுத்தத்தில் காசு வசூல் செய்தல் என்று அற்பத்தனமாகத்தான் நடந்து கொள்கின்றனர். இருந்தாலும் ஒரு சில அரசியல் வாதிகள் இலட்சம் கோடி வரையிலான பேரங்களில் பேசப்படத்தான் செய்கின்றனர்!.மகாகவி பெரிதினும் பெரிது என்று சொன்னார். அரசியல் வாதிகள் ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்ய வேண்டாம். புழுதி பறக்காத நல்ல சாலைகள், குடிநீர் மின்சாரம் இவைகளைக் கொடுப்பதற்கு என்ன கேடு என்று நான் சிந்திக்கின்றேன். தமிழகத்தின் கிராமச் சாலைகள் தான் பொதுக் கழிப்பறைகள். ஒரிரு மனிதர்கள் வாழ்கின்ற இடங்களில் திறந்த வெளிக்கழிப்பறைகள் ஒ.கே ஆனால் ஆயிரக்கணக்கான மனிதர்கள் வாழ்கின்ற இடங்களில் இன்னும் இந்த மாதிரி சூழ்நிலை நிலவுவது சரிதானா? அதுவும் சட்டத்திற்கு கீழ்பணியும் மக்களிடம். ஒரு உத்தரவும் அதை அமல் படுத்துவதில் உறுதியும் இருந்தால் போதுமானது நாடு சுத்தமாக ஏன் உத்தரவிட விருப்பம் இல்லை? தமிழ் நாட்டு அரசியல் இப்படியே தான் நீடிக்குமா? என்று நான் ஆச்சரியப்படுகின்றேன். படிப்பறிவில்லாத சினிமா மோகம் நிரம்பிய மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.குளிர் சாதன வீடுகளிலும் கோடை வாசஸ்தலங்களிலும் வாசிக்க கொடுப்பினை உள்ள மனிதர்கள் அதிகாரம் விதி வசத்தால் அவர்கள் விரல் நுனியில் அமர்ந்திருக்கின்றது. மக்களோ தாங்கள் வாக்களிக்கும் நபர் வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் தங்களுக்கு அவமானம் என்று நினைக்கின்றார்கள்.இந்தச் சூழ்நிலையில் நல்லாட்சி அமைவது என்பது கடினம். எத்தனையோ திறமை மிகு மனிதர்கள் நல்லதோர் வீணைகள் நலம் கெட புழுதியில் எறியப்பட்டு விட்டார்கள். மக்களுடன் வசித்தால் நீங்கள் அரசியல் வாதி என்றே கருதப்படுவதில்லை. ஆணவத்துடன் அதிகார பலத்துடனும் எப்போதுமே சந்திக்க முடியாத நபராக இருந்தால் நீங்கள் தலைவராக கருதப்படுவீர்கள். நல்லது புழுதி படர்ந்த சாலைகளையும் மின்வெட்டினையும் மோசமான நிர்வாகத்தினையும் நான் சகித்து பழகி விட்டேன். எருமை மாடுகள் மாதிரி வாழ்வது கடினம் தான். தன்மானம் என்பதை ஆணவம் என்றும் ஆணவம் என்பதை தலைமக்கான சிறப்புத் தகுதி என்றும் நினைக்கின்ற மக்கள் மத்தியிலே வேறு என்ன செய்ய முடியும்.படிப்பறிவு மிகுந்த இளைய தலைமுறையாவது மாற்றங்களைக் கொண்டு வரச் சிந்திக்கலாம்
No comments:
Post a Comment