Monday, April 14, 2014

குஜராத் நிறுவன பங்குகளின் விலை உயர்ந்து வருவதாக த இந்து செய்தியொன்று கூறுகின்றது. மோடி அலைவீசுவதாகவும் அதனால்குஜராத் நிறுவன பங்குகள் விலை உயர்வதாகவும் அந்த செய்தி கூறுகின்றது. மோடி அலையை இந்தப் பத்திரிக்கையாளர்கள் மட்டும் எப்படியோ காண்கின்றார்கள். ! மோடி பயணம் செய்வதற்கு தனது நிறுவன விமானத்தினை கொடுத்திருப்பதாகக் கூறப்படும் அதானி என்ற நிறுவனத்தின் பங்குகள் கடந்த செப்டம்பரில் ரூ141.20 ஆகவும் தற்போது ரூ437.50 ஆகவும் உள்ளதாகக் கூறப்படுகின்றது. மோடி பிரதமராக ஆவது ஒரு நிறுவனத்தின் வர்த்தக வாய்ப்புக்களை எப்படி பாதிக்கும் என்று தெரிய வில்லை. அப்பாவி முதலீட்டாளர்கள் தங்கள் சேமிப்புத் தொகைகளை பங்குச் சந்தையில் இழக்க வைப்பதற்கு தான் இத்தகைய செய்திகள் உதவும்.  மோடி வருவது நல்ல சகுனம் என்று சிலர் சொல்வார்கள். முந்தைய பாரதிய ஜனதா ஆட்சிக்காலத்தில் பங்குச் சந்தையில் பலர் முதலீடு செய்து பணம் இழந்த்தைப் போல் இந்த முறை ஏமாறாமல் இருந்தால் சரிதான். ஆனால் மோடியை ஏழைப் பங்காளர் போன்று சித்தரிக்கும் வேலைகள் முட்டாள்தனமானவை. பெரிய நிறுவனங்களுக்காக அவர் நிறைய விவசாய நிலங்களை ஆர்ஜிதம் செய்து கொடுத்திருக்கின்றார் என்று கூறப்படுகின்றது. குஜராத் வளர்ச்சியடைந்த மாநிலம் என்ற தகவல்களை 2011 வருட  மக்கள் தொகை கணக்கெடுப்பில் காட்டப்படும் தகவல்கள் உறுதி செய்யவில்லை. தொலைக்காட்சி போன்ற அடிப்படையான நுகர் பொருள் உரிமையாளர் எண்ணிக்கையில் கூட குஜராத் பலமாநிலங்களைவிட பின் தங்கியே இருக்கின்றது. தொழில் வளர்ச்சி என்று கூறப்பட்டாலும்  தொழிற்சாலைகளால் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் மாசு பெரிய பிரச்சனையாக சுட்டிக் காட்டப்படுகின்றது. குஜ்ராத்தில் மோடி பதவியேற்கும் முன்பே மின்சார இணைப்புகள் வழங்குவதில் தன்னிறைவு அடைந்த மாநிலம் என்று கூறப்படுகின்றது.  மோடி ஊழலுக்கு எதிரானவர் என்று சொல்ல முடியாது. எதியூரப்பா, ரெட்டி சகோதரர்கள் போன்றோர் விவகாரங்களில் மூத்த தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி அவர்கள் பாரதிய ஜனதாவில் மறுவாழ்வு பெற்றதில் மோடிக்கு மிகுந்த பங்கு உண்டு.மோடி அமைச்சரவையில் இருந்த பாபுலால் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக சிறை சென்றவர். சில அமைச்சர்கள் மீது வேறு குற்றச் சாட்டுகள் இருக்கின்றன. குஜ்ராத் கலவரம், போலி என்கவுண்டர் சாவுகள், பெண்ணை வேவு பார்த்த விவகாரம், திருமணமானதை மறைத்தது என பல குற்றச்சாட்டுக்கள் எதுவுமே மோடிக்கு பெருமை சேர்க்கும் வகையில் இல்லை. குஜராத் லோக் ஆயுக்தாவிற்கு நீதிபதிகள் நியமனம் செய்ய அவர் செய்த தாமதம் மோடிக்கு பெருமை சேர்க்கவில்லை. மேலும் மோடி குஜராத் பெருமை பேசுகின்றவர். அவர் ஒரு வட்டார உணர்வுகளை தூண்டி விடுகின்ற அரசியல்வாதியாகத்தான்  இருக்கின்றார். தென்மாநிலங்கள் குஜராத்தினை விட கல்வி, வாழ்நாள் காலம் ஆண்பெண் விகிதம் போன்ற பல அம்சங்களில் குஜ்ராத்தினை விட பலமடங்கு முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் போலி மதச்சார்பின்மையை கடைபிடிப்பதாக கூறும் மோடி தனது மாநிலத்தில் சத் பாவனா எனப்படும் நல்லிணக்க கூட்டங்களை நிறைய நடத்தினார். முஸ்லீம்களுடன் நல்லுறவு ஏற்படுத்த இவை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இந்த கூட்டங்களில் ஒவ்வொரு மாவட்ட வளர்ச்சிக்கும் பெரிய அளவில் நிதி கொடுப்பதாக அறிவித்தார். ஆனால் அறிவித்தபடி நிதி வழங்கப்படவில்லை. நிர்வாகத்தில் சிறந்தவராக தன்னைக் காட்டிக் கொள்ளும் மோடி கடந்த 7, 8 மாதங்களாக குஜராத்  செல்லாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றார். குறைந்த  பட்சம் தனது முதல்வர் பதவியை அவர் இராஜினாமா செய்திருக்கலாம். தோற்றுப் போனால் முதல்வர் பதவி கைவிட்டு போகும் என்று மோடி அச்சப்படுகின்றார் என்று தெரிகின்றது. மேலும் கூட்டங்களில் பேசும் போது வரலாற்றினை தவறாகப் பேசுவது பிரதமர் வேட்பாளருக்கு பொருத்தமில்லாததாக இருக்கின்றது. விசாரித்து நன்கு தகவல் தெரிந்து மோடி பேசுவதில்லை . அவருடையது ஒரு தெரு முனைப் பேச்சாளர் உத்தி தான். மக்களின் உணர்ச்சிகளை கிளப்பி விடுவது தான்.2ஜி அலைக் கற்றை விவகாரத்தில் பாராளுமன்றத்தினை பலநாட்கள் முடக்கிய பாரதிய ஜனதா இன்று தேர்தலுக்கு பிந்தைய திமுக கூட்டணிக்கு தயாராக இருப்பதால்  தான் திமுகவினை விமர்சனம் செய்வதில்லை என்று கூறப்படுகின்றது. இராஜாவிற்கு எதிராக வேட்பாளரைக் கூட பாரதிய ஜனதா நிறுத்தவில்லை.மேலும் தேர்தலுக்கு பிந்தைய அதிமுக கூட்டணிக்கும் பாரதிய ஜனதா தயாராக உள்ளதாக கூறப்படுகின்றது. மோடி இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டை ஆள்வதற்கான தகுதி படைத்தவர் அல்ல. பத்திரிக்கைகள் மூலமாகவும் பெரு முதலாளிகள் மூலமாகவும் பாரதிய ஜனதாவிற்கு நெருக்கடி கொடுத்து பிரதமர் வேட்பாளர் ஆகிவிட்டார். இந்திய மக்களிடம் இந்தப் பிரச்சாரம் எடுபடுமா என்று தெரிய வில்லை

No comments:

Post a Comment