Wednesday, April 23, 2014

பிராந்திய வாதம் சரிதானா? 
    தேசிய கட்சிகள் தமிழக நலன் சார்ந்த சங்கதிகளில் மவுனம் சாதிப்பதாகவும்  பிராந்திய நலன்களை புறக்கணிப்பதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் முற்றுலும் அபத்தமானவை.  தேரான் தெளிவு தீரா இடும்பை தரும் என்பார் திருவள்ளுவர்.  தேசிய கட்சிகள் குற்றம் கூறப்படும் முக்கியமான பிரச்சனை மாநிலங்களுக்கிடையே நிலவும் நதிநீர்  சரியான முறையில் பங்கு பிரிக்காதது. குறிப்பாக காவிரி முல்லைப் பெரியாறு போன்ற நதிநீர் பிரச்சனையில் தேசிய கட்சிகள் பல நிலைப்பாடு எடுப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள். இந்தப்பிரச்சனைப் பொருத்த வரை எனக்கு தெரிந்த தமிழ்நாட்டின் இரண்டு நீர்பங்கீடு பிரச்சனைகளை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். பரம்பிக்குளம் ஆழியாறு கீழ்ப்பவானி திட்டம் ஆகிய வற்றில் பிரச்சனைகள் இருக்கின்றன. பரம்பிக்குளம் முதல் மடை கடை மடைப் பகுதி  மற்றும் கீழ்ப்பவானி பகுதியில் கால்வாய்களை கான்கீரிட் செய்தல் போன்றவற்றில் பிரச்சனைகள் இருக்கின்றன. இரண்டிலுமே தமிழ்நாட்டு விவசாயிகள் தான். இதில் ஒவ்வொரு பகுதி மாநிலக்கட்சியினர் ஒவ்வொரு நிலை எடுக்கின்றனர். கீழ்ப்பவானியை எடுத்துக்கொள்ளுங்கள். கடைமடை விவசாயிகள் கால்வாய்களை கான்கீரிட்  செய்வது ஆதரிக்கின்றனர். முதல் மடை விவசாயிகள் கால்வாய்களில் கான்கீரிட் செய்தால் அருகிலுள்ள கிணறுகளின் நீராதாரம் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காவிரித்தாயும் முத்தமிழ் அறிஞரும் இந்த மாதிரியான வட்டார பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு வைத்திருக்கின்றனர் என்று தெரியவில்லை. மின்வெட்டு பிரச்சனையே எடுத்துக் கொள்ளுங்கள். சென்னையில் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கின்றது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் மின்வெட்டு நிலவுகின்றது. ஏன் மின்சாரம் சமமாக பகிர்ந்தளிக்கப்படுவதில்லை.  திமுக அதிமுக இரண்டுமே இவ்வாறு தான் செய்கின்றன. கோயமுத்தூர் மதுரை திருச்சி போன்ற வளரும் நகரங்கள் மின்வெட்டினால் மிகக் கடுமையாகப்பாதிக்கப்பட்டன. பிராந்திய வாதம் பேசும் அதிமுகவும் திமுகவும் இதற்கு என்ன சொல்கின்றன.கர்நாடகா கேரளம் போன்ற வெளி மாநிலங்கள் என்றால் அவதூறு பேசுவது எளிது. கெயில் நிறுவன எரிவாயு கொண்டு செல்லும் குழாய் பதிக்கும் பிரச்சனையை எடுத்துக் கொள்ளுங்கள். கெயில் மத்திய அரசு நிறுவனமாக இருந்ததால் கண்டபடி பேசி பிரச்சனை பெரிதாக்கப்பட்டது. இதே தமிழ்நாடு  மாநில அரசின் மின்சார விநியோக நிறுவனம் மாநிலமெங்கும் மின் கோபுரங்களை எந்த இழப்பீடும் கொடுக்காமல் நிறுவுகின்றது. உண்மையில் இந்த மின்கோபுரங்கள் தான் தென்னை போன்ற மரப்பயிர்கள் விவசாயத்தினை பாதிக்கும்.  பலபிரச்சனைகளில் மத்திய அரசிற்கு எதிராக போராட்டத்தினை தூண்டி விடுவதும் அந்தப் போராட்டக்காரர்களுக்கு மறைமுக உதவுவதும் மாநில கட்சிகளின் அரசியல் சதிகளில் ஒன்றாக இருக்கின்றது. முல்லைப்பெரியார் பிரச்சனையை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஏழை மலையாளி டீக்கடையில் கல் வீசி எறிந்தால் முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சனை  தீர்ந்து விடுமா? ஆனால் ஜெயலலிதா அரசு போராட்டக்காரர்களை வேடிக்கை பார்த்து சட்ட ஒழுங்கு சீர் குலைவிற்கு வழிவகுத்தது. அதிகாரப்பகிர்வு பற்றி பேசும் திமுக அதிமுகவினர் உள்ளாட்சி தேர்தல்களில் செய்கின்ற குளறுபடிகளைப் பாருங்கள். மத்திய அரசு கொண்டு வந்த பஞ்சாயத்து ராஜ்  சட்டத்திற்கு அப்புறம் தான் உள்ளாட்சி தேர்தல்கள் முறையாக நடக்கின்றன. இல்லையென்றால் பஞ்சாயத்து தேர்தல்களே நடக்காது. கூட்டுறவு தேர்தல்களைப் பாருங்கள் எத்தனை முறைகேடுகள். சட்டமன்றத் தேர்தல்களை நடத்தும் பொருப்பினை மாநிலக் கட்சிகளிடம் கொடுத்து பாருங்கள் அப்புறம் தெரியும் இவர்கள் இலட்சணம் நாட்டை ஆப்கானிஸ்தான் செய்து விடுவார்கள். அகில இந்திய தேர்தல் ஆணையத்தின் பொருப்பில் இருப்பதால் தேர்தல்கள் ஒழுங்காக நடக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் சில முட்டாள்கள் தான் இருந்தார்கள். மக்களின் உணர்ச்சிகளை தூண்டி விட்டால் அரசியல் இலாபம் கிடைப்பதால் இன்று முட்டாள்களின் எண்ணிக்கையும் அவர்களை வணங்குபவர்கள் எண்ணிக்கையும் அளவில்லாமல் போய்விட்டது. தெலுங்கானா சீமாந்தாரா பிரச்சனையை எடுத்துக் கொள்ளுங்கள். ஆந்திராவை பிரித்தாலோ பிரிக்கவிட்டாலோ பாலாறும் தேனாறுமா ஒடப்போகின்றது. ஆனால் பிராந்திய உணர்வு கொண்ட மக்கள் ஒரே மொழி பேசும் மக்களைப் பிரித்து அரசியல் இலாபம் அடையச் செய்யும் முயற்சிகளைப் பாருங்கள். தமிழ் மீனவர்கள் பிரச்சனையிலேயே இலங்கை மீனவர்களுக்காக சிங்கள் இராணுவம் தமிழ் மீனவர்களை கொடுமைப்படுத்துகின்றது என்று மாநிலக் கட்சிகள் பேசுகின்றன. ஆனால் மாநிலக் கட்சிகளால் தொப்புள் கொடி உறவுகள் என்று வர்ணிக்கப்படும் இலங்கை வடக்கு கிழக்கு தமிழ் மீனவர்களுக்காகத் தான் சிங்கள் இராணுவம் செயல் படுகின்றது என்ற உண்மை தமிழ் நாட்டில் வசதியாக மறைக்கப்படுகின்றது.  பிராந்திய வாதம் உணர்வுகளை கிளறி விடலாம் ஆனால் உண்மைகள் வேறாக இருக்கின்றன. அரசியலில் தலைவர்கள் ஆக பிராந்திய வாதம் உதவலாம் அவ்வளவு தான்.

No comments:

Post a Comment