Friday, May 23, 2014

நரேந்திர மோடி என்ன தான்  செய்ய முயல்கின்றார். பாகிஸ்தான் பிரதமரை பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கின்றார். இலங்கையில் இனப்படுகொலைக்கு காரணமான இராஜபக்சேவினை அழைக்கின்றார். பங்களாதேஷ் பிரதம மந்திரியை அழைக்கின்றார். நரேந்திர மோடியின் முயற்சிகள் தவறானவையல்ல.  ஆனால் தேர்தலுக்கு முன்னால் இவர் ஒவ்வொரு மேடையிலும் தெரிவித்த செய்திகள் பேசிய பேச்சுக்கள் இவருடைய செயலுடன் ஒத்துப்போகவில்லையே. நவாஷ் செரீப் பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அப்போதிய இந்தியப் பிரதமர் மன்மோகன் அவர்களுக்கு அழைப்பு விடுக்க்ப்பட்ட  போது அவர் செல்ல மறுத்துவிட்டார். இந்திய எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் எல்லையில் படுகொலை செய்யப்பட்ட சமயம் அது. மன்மோகன்சிங்கை வீக் பிரதமர் பலவீனமான பிரதமர் என்று பாரதிய ஜனதா விமர்சனம் செய்தது. எல்லையில் வீரர்கள் இறந்துகொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா பாகிஸ்தான் பிரதமருக்கு கோழிப்பிரியாணி போடுவதாக தேர்தல் மேடைகளில் மோடியும் பாரதிய ஜனதாவினரும் பேசினர். அசாமில் மேற்கு வங்கத்தில் மோடி பேசும் போது சட்ட விரோதமாகக் குடியேறிய வங்க தேசிகளை வெளியேற்றுவேன் என்று பேசினார். தமிழகத்திலோ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான ஆட்களுடன் கூட்டணி வைத்தவர் தற்போது  இலங்கை அதிபர் மஹிந்த இராஜபக்சேவை வரச் சொல்லி சிவப்பு கம்பளம் விரிக்கின்றார். என்ன தான் சொல்ல வருகின்றார் மோடி. நான் இரண்டு மோடிகளைக் காண்கின்றேன். தேர்தலுக்கு முன்னால் இந்தியாவின் இரண்டு பெரிய எதிரிகளான பாகிஸ்தான் மற்றும் செஞ்சீனத்திற்கு ஒரே நேரத்தில் சவால் விட்ட ஒரு மோடி. இது முட்டாள் தனம் என்றாலும் தேர்தல் நேரப் பேச்சுக்களை நமது பக்கத்து எதிரிகள் பொருட்படுத்தவில்லை. இந்த வீரவேசமான மோடி தேர்தல் மோடி தற்போது பிரதமர் மோடி. பதவியேற்பு விழாவிற்கு அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்புகின்றார். ஏன்  இராஜதந்திரமில்லாத இந்த முயற்சி. தேர்தலுக்கு முந்தைய இவரது பேச்சுக்களை அண்டை நாடுகள் கூர்ந்து கவனிக்காதா? நான் நினைப்பது மோடி தன்னை ஒரு சமாதானக் காவலனாக காட்டிக்கொள்ளும் முயற்சியில் இறங்குகின்றார் . உலக அரங்கில் தன்னை ஒரு சமாதானப்புறாவாக அவர் தன்னைக் காட்ட விரும்புகின்றார். ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன்  வானிலை மாற்ற ஐநா சபைக் கூட்டத்தில் பேசுவதற்கு மோடி வர வேண்டும் என்று விரும்புவதாக செய்திகள்  கூறுகின்றன. மோடி பின்புலக்குழுவின் செல்வாக்கு பான் கீமூன் வரை செல்லுபடியாகின்றது . ஜவஹர்லால் நேருவிற்கு பின்னர் உலக அளவில் இந்தியத் தலைவர்கள் செல்வாக்கு பெறவில்லை. அணிசேரா நாடுகள் போன்ற பெரிய குழுக்களை அமைப்பதில் நேரு முக்கியப் பங்காற்றினர். அவரைப் போல் மோடி ஆக நினைக்கின்றாரா?  தெற்காசியாவில் அமைதியை நிலைநாட்டி அமைதிக்கான நோபில் பரிசினை பெறுகின்ற முனைப்பில் அவர் இருக்கின்றாரோ என்னவோ நேற்று சொன்ன வார்த்தைகள் எல்லாம் காற்றோடு போயின. அவ்வளவு தான் ! மோடி எத்தனை முரண்பாடுகள் !!அந்த முரண்பாடுகளுக்கு விளக்கம் சொல்ல எத்தனை பேர்!!!

No comments:

Post a Comment